கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்பாறையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் என்கிற கார்த்திக் அப்புசாமி அறிமுக கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர செயலாளர் மயில்கணேசன் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல்கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம், தேயிலை தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வி.அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “திமுகவின் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. திமுகவில் ரியல் எஸ்டேட் செய்பவர்கள், பண வசதி உள்ளவர்களுக்குத்தான் வாய்ப்பு தருவார்கள். ஆனால் அதிமுகவில் கட்சிக்காக உழைக்கும் சாதாரண தொண்டனுக்கும் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு திமுகவில் வாய்ப்பே கிடைக்காது.
கட்சிக்காக சிறப்பாக பணியாற்றி வந்த ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி. நமது அதிமுகவின் முன்னாள் எம்பி மகேந்திரனைப் போல சிறப்பாக செயல்படுவார். உங்கள் தொகுதியைச் சேர்ந்தவர். அவர் வெற்றி பெற்று தொகுதிக்கு அதிகமான திட்டங்களை கொண்டுவருவார். ஆகவே கட்சி வித்தியாசம் பார்க்காமல் வாக்களிக்க வேண்டுகிறோம்.
கடந்த 5 வருடங்களாக இத்தொகுதிக்கு திமுக எம்.பி. என்ன செய்தார். எத்தனை முறை வால்பாறைக்கு வந்தார். வால்பாறை தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. எந்தவொரு திட்டங்களையும் தரவில்லை. அதுபோல விடியா திமுக ஆட்சியில் கடந்த 3 வருடமாக வால்பாறைக்கோ, கோவை மாவட்டத்திற்கோ ஏதாவது திட்டங்களை தந்தார்களா? ஒன்றுமே செய்யவில்லை. திட்டங்களை தராமல் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைக்கூட கிடப்பில் போட்டுவிட்டது.
அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் வால்பாறை தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றினோம். நீண்ட காலம் போடப்படாத சாலைகள் எல்லாம் அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது. எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்தோம். அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தோம். ஆனால் விடியா திமுக அதனை கிடப்பில் போட்டுவிட்டது. இன்று தமிழகத்தில் மோசமான ஆட்சிதான் நடத்தி வருகிறது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகியவற்றை நிறைவேற்றினோம். அதனை பராமரிக்காத ஆட்சி திமுக ஆட்சி.
நீண்ட கால கோரிக்கைகளையெல்லாம் வால்பாறை தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றினோம். ஏழை, எளியோருக்காக 112 வீடுகளை அற்புதமாக கட்டிக் கொடுத்தோம். அதை கூட முடிக்காமல் இழுத்தடித்து வருகிறது. மேலும் தோட்டத் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது மூன்று சென்ட் இடம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை கார்த்திகேயன் என்கிற கார்த்திக் அப்புசாமி வெற்றி பெற்று நிச்சயம் நிறைவேற்றுவார். இங்கு மட்டுமல்ல நீலகிரிக்கும் நான்தான் பொறுப்பாளர். இதே கோரிக்கையை அங்கேயும் வைத்தார்கள். உங்களது கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி சட்டமன்றத்தில் வால்பாறை மக்களுக்காக எப்படி தொடர்ந்து குரல் கொடுத்து உறுதுணையாக செயலாற்றி வருகிறாரோ, அது போல நாடாளுமன்றத்தில் கார்த்திக் அப்புசாமி உங்களுக்காக குரல் கொடுப்பார். துணையாக இருப்பார். தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினையை தீர்க்க மத்தியில் நாடாளுமன்றத்திலும் ஒலிக்கவேண்டும். ஆகவே கழக வேட்பாளர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பார்.
2026 மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். புரட்சித் தமிழர் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார். கண்டிப்பாக உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்.
கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகாலம் காணாத வளர்ச்சி திட்டங்களை 5 ஆண்டுகளில் தந்தோம். மிகப்பெரிய வளர்ச்சியை அதிமுக தந்தது. ஒன்றுமே செய்யாத திமுகவை புறக்கணியுங்கள். எண்ணற்ற திட்டங்களை தந்த அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று உரிமையோடு கேளுங்கள். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு என அனைத்தையும் உயர்த்தி தமிழக மக்களை திமுக ஆட்சி வஞ்சித்து வருகிறது. இன்று யாரும் தமிழகத்தில் நிம்மதியாக இல்லை. அரசு ஊழியர்கள் கூட எடப்பாடியார் முதல்வராக வரவேண்டும் என விரும்புகின்றனர். ” என்று பேசினார்.
முன்னதாக வால்பாறைக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி.வேலுமணி மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயன் என்கிற கார்த்திக் அப்புசாமி ஆகியோருக்கு சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
Leave a Reply