தொண்டாமுத்தூரில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

Spread the love

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு விலங்குகள், குறிப்பாக யானைகள், அடிக்கடி ஊர் பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பயிர்சேதம் மற்றும் வீடுகள் சேதம் போன்ற பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றனர்.

இதனைத் தடுக்க வனத் துறையினர் கண்காணிப்பு குழுக்களை அமைத்து வனவிலங்குகளை மீண்டும் காடுகளுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த ‘ரோலக்ஸ்’ என்ற ஒற்றை யானை கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு விவசாயி நாகராஜ் என்பவரின் தோட்டப் பகுதியில் உணவு தேடி வந்த மற்றொரு ஆண் காட்டு யானை, அங்கிருந்த மின் கம்பியை சாய்த்ததாக கூறப்படுகிறது. அதில் மின் கம்பம் யானையின் மீது விழ, மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே உயிரிழந்தது.

தகவல் அறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, வனக் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு, யானையின் உடல் வனப் பிரதேசத்துக்குள் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தச் சம்பவம், மின்கம்பி பாதுகாப்பு குறைபாடு மற்றும் வன எல்லைப் பகுதிகளில் யானை நுழைவு பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.