முருக பெருமானுக்கு முதன்மையாக கொண்டாடப்படும் விழாக்களில் முக்கிய நிகழ்வாக உள்ள தைப்பூசத் திருவிழா ஆண்டு தோறும் தமிழ் மாதமான தை மாத பௌரணமியை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா பிரசித்திபெற்றது. தற்போதே பாதையாத்திரை சென்று பக்தர்கள் அதிகமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவின் போது இந்த கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் ,சிறப்பு வசதிகள் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை, ஈரோடு பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
மதுரை, சிவகாசி பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் செம்பட்டி வழியாகவும், சிவகங்கை, காரைக்குடி பகுதியில் இருந்து பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் நத்தம் வழியாகவும் வருகின்றனர் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி செய்து தருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ‘வருகிற பிப்ரவரி 5ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடர்ந்து 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. தைப்பூச உற்சவ நாளான பிப்ரவரி 12ஆம் தேதிக்கு முந்தைய நாள் பிப்ரவரி 11 மற்றும் அதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 13 ஆகிய 3 நாட்களில் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவசமாக தரிசனம் செய்யலாம். பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது அதில் பாதி இலவசமாக இயக்கப்படும்.” தைப்பூசத் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு என மொத்தமாக 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் ‘ என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply