தேர்தல் நடக்கவுள்ளதால் நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின் – விருதுநகரில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

Spread the love

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, விருதுநகரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

விருதுநகர் மக்களுக்கு உரையாற்றிய பழனிசாமி, “இந்த மண், கர்மவீரர் காமராஜர் பிறந்த மண். இங்கு பேசுவது எனது பாக்கியம்,” எனக் கூறினார். “காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர்கள், அவர்களைப் போல இன்று ஆளும் தலைவர்கள் இல்லை” என்றார்.

திமுக எம்பி ஒருவரின் அவதூறான பேச்சை திமுக தலைவர் கண்டிக்காதது கண்டிக்கத்தக்கது எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, “இப்போது ஆட்சி நடப்பது குடும்ப அரசியலாகவே இருக்கிறது, மக்களைக் கவனிக்காமல், சொந்தவர்களின் அதிகாரத்தை பார்த்துக்கொள்கிறார் ஸ்டாலின்,” என்றார்.

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, முதலீடு என அதிமுக சாதனைகள் பட்டியலிடப்பட்டன.
2011 முதல் 2021 வரை 17 மருத்துவக் கல்லூரிகள், 67 கலை அறிவியல் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 5 பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டதாகவும், இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை நிலைநாட்டியது அதிமுக ஆட்சியே என பெருமிதம் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை. 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 20 நாளில் 11 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. மக்கள் பாதுகாப்பே இல்லை” என்று எச்சரிக்கைச் செய்தார்.

விலை உயர்வும், கட்டுமானச் சுமையையும் வலியுறுத்தினார்.
“வீடு கட்ட அனுமதி கட்டணங்கள், சொத்துவரி, மின்கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்ந்துள்ளன. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஏழைகளுக்கான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்” என வாக்குறுதி வழங்கினார்.

நீட் தேர்வு, வேலைவாய்ப்பு, பொங்கல்-தீபாவளி நலத்திட்டங்கள் உள்ளிட்டவை பற்றியும் சாடினார்.
“நீட் ரத்து செய்வோம் என்று கூறி, தற்போது எதையும் செய்ய முடியாது என்று கைகளை விரித்துவிட்டார் ஸ்டாலின். பொங்கல், தீபாவளிக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சி வந்ததும் மீண்டும் வழங்கப்படும்,” என்றார்.

திமுக தேர்தல் முன்வாக்குறுதிகள் நடிக்கப்படும் நாடகம்தான் என குற்றச்சாட்டு:
“46 பிரச்னைகள் என பட்டியல் வைத்துள்ளார் ஸ்டாலின். இதுவரை என்ன செய்தீர்கள்? தேர்தல் வந்ததால் நாடகம் ஆடுகிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ஏமாற்றமே. புகார் பெட்டி திட்டம் கூட வெற்றிகரமாக செயல்படவில்லை,” என்றார்.

முடிவில்:
“நாங்கள் கடந்த ஆட்சியில் விருதுநகருக்கு மருத்துவக் கல்லூரி, குடிநீர் திட்டம், மணிமண்டபங்கள் என பல வளர்ச்சித்திட்டங்களை வழங்கினோம். இனியும் மக்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,” என உறுதியளித்தார் எடப்பாடி பழனிசாமி.