தேசிய அளவிலான புரோ குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி!… கோவையில் வெகு சிறப்பாக தொடக்கம்!….

Spread the love

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 3, 2025 : கோவை எஃப் 7 ஹப் சார்பில் கோவையில் இன்று (03.08.2025) இரண்டாவது முறையாக தேசிய புரோ குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்புடன் தொடங்கியது. கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள எஃப் 7 ஹப் அரங்கில் நடைபெற்றது, இந்தப் போட்டிகள் இந்திய குத்துச்சண்டை கவுன்சிலின் (IBC) அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றது.

2023-ல் முதன் முறையாக வெற்றிகரமாக கோவையில் நடத்தப்பட்ட இந்த சாம்பியன்ஷிப் போட்டி, இப்போது மேலும் அதிக உற்சாகத்துடன் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 தொடக்கப் போட்டிகள் நடைபெற்றன. அதன் பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இறுதியில் ஒருவர் சாம்பியனாக முடிசூடுவார்.

இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாட்டின் முன்னணி 16 தொழில்முறை வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் சர்வதேச வீரர் முகமது ஷமிம், கோவை வீரர் முகமது இர்பான் ஹஃபர்குல்லா, கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசாத் ஆசிப் கான், பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் வீராங்கனை ராமன்தீப் கவுர் ஆகியோர் பங்குபெறுகின்றனர். இவர்கள் அனைவரும் பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளில் சாதனைகள் படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகள் குறித்து எஃப் சேவன் ஹப்பின் நிறுவனர் திரு. ஏ. ராயன் கூறுகையில், “இந்திய இளைஞர்களிடையே குத்துச்சண்டையின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை இந்திய வீரர்கள் தவறவிட்டாலும், அத்தகைய முயற்சி இளம் தலைமுறைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துவிட்டது. இந்தத் தொழில்முறை குத்துச் சண்டை போட்டிகள், கோவை இளைஞர்களிடம் விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் உருவாக்கும்,” என்றார்.

எஃப் 7 ஹப் சார்பில் வெற்றியாளர்களுக்கு மொத்தம் ₹1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார இளைஞர்களுக்காக எஃப் 7 ஹப் இலவச குத்துச்சண்டை பயிற்சியையும் அளித்து வருகிறது.

இந்த நிகழ்வுக்கான ஸ்பான்சர் ஒப்பந்தங்கள், டிக்கெட் விற்பனை மற்றும் ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தேசிய தரச்சார்பில் செய்யப்படுவதால், பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை விளையாட்டுத் துறை வளர்ச்சியில் மேலும் ஒரு மைல்கல்லாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. தமிழகத்தின் குத்துச் சண்டை விளையாட்டுக்கான புது ஊக்கத்தை இந்தப் போட்டிகள் அளிக்க உள்ளன.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மிசோராம், ஹரியானா, சண்டிகர் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 14 வீரர்கள் மற்றும் 2 வீராங்கணைகள் பங்கேற்றனர். முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் சென்னையை சேர்ந்த கனிஷ்கா மற்றும் சண்டிகரை சேர்ந்த ராமன்தீப் கவுர் ஆகியோர் மோதினர். ஆறு சுற்றுகளுடன் மிகவும் விருவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் மூன்று சுற்றுகளில் சென்னையை சேர்ந்த கனிஷ்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கடைசி இரண்டு சுற்றுகளில் சண்டிகரை சேர்ந்த ராமன்தீப் கவுர் சிறந்த தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த குத்துகளை கொடுத்து போட்டியில் வெற்றி பெற்றார்.

இதேபோல் ஆண்களுக்கான போட்டியில் ஷர்வன் ரஞ்சித் தாஸ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மோதிய நிலையில் துவக்கம் முதலே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர். இறுதியில் ஷர்வன் ரஞ்சித் தாஸ் நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றார். இதேபோல் தேசிய அளவில் சிறந்த வீரர்களான முகம்மது இர்ஃபான், அசத் ஆசிஃப் கான், மொஹம்மத் ஷமீம் உள்ளிட்ட பலர் போட்டியில் பங்கேற்று தங்களது சிறப்பான குத்துசண்டையினால் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மொத்தம் ₹1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.