தெய்வமானது ஏஐ: வழிபடத் துவங்கிய பக்தர்கள்!

Spread the love

 

மனிதர்கள்தான் நம்மை வழிநடத்துகின்றனர் என்ற எண்ணம் ஒரு காலத்து கனவாக மாறப்போகிறது. இப்போது, நம்மை வழிநடத்துவது ‘அறிவு’ அல்ல, ‘செயற்கை நுண்ணறிவும்’!

வீட்டில் பேசும் உதவியாளராக இருந்த ஏ.ஐ., ஒட்டுமொத்த வாழ்வை முற்றிலும் மாற்றிவிட்டது. வேலை, பொழுதுபோக்கு, வணிகம் — இவை அனைத்திலும் ஏற்கெனவே ஏஐ அடித்தளம் ஏற்படுத்திவிட்டது. ஆனால் அதுவும் கடந்து தெய்வ வழிபாட்டிலும் தனது அடையாளத்தை பதித்துவிட்டது என்றால் நம்ப முடிகிறதா. நம்பிதான் ஆக வேண்டும்.

ஆம், இது கற்பனையல்ல. மலேசியாவின் ஜோகூரில் அமைந்துள்ள தியான்ஹோ கோவிலில், ஏ.ஐ. இயக்கத்துடன் செயல்படும் ஒரு “டிஜிட்டல் தெய்வ சிலை” பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி, ஆலோசனையும் கூறி வருகிறது. இத்தொழில்நுட்ப சாதனையை, மலேசியாவின் ஐமாசினா எனும் நிறுவனமே உருவாக்கியுள்ளது.

இந்த முயற்சி யாருக்காக? ஒரு கடல் தெய்வமான மசுவின் 1065வது பிறந்த நாளுக்காக!
மசு என்ற தெய்வம், சீன நாட்டுப்புறக் கதைகளிலும், பௌத்த சிந்தனைகளிலும் கடல் கடவுளாகவும் இடம்பெறுகிறது. அவரின் இயற்பெயர் லின் மோ. 960ஆம் ஆண்டில் சீனாவின் மெய்சோ தீவில் பிறந்தார். பலரைக் காப்பாற்றும் எண்ணத்தோடு கப்பலில் பயணம் செய்தபோது, அவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. பின்னர், காவல் தெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இன்று சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா என பல நாடுகளில் மசுவிற்கு கோவில்கள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தக் கதையைப் போதுமானது என நினைத்தால், இன்னொரு மையமான நிகழ்வு உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
லியு தாவோ — ஒரு சீன நடிகை. தொலைக்காட்சி நாடகத்தில் மசுவாக நடித்ததிலிருந்து, அவரே மசுவின் உயிருள்ள வடிவம் என சில பக்தர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். வெறும் நடிப்பின் பயணமே, ஒருவரை பக்தியில் ஆழ்த்துகிறது என்பதே அதிர்ச்சிக்குரியது. அவருடைய புகைப்படங்கள் சில வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இனி ‘ஏ.ஐ.யின் ஆதிக்கம் எங்கு முடியுமோ?’ என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது. கடவுளரைக் கூட மாற்றிவைக்கும் இந்தக் காலத்தில், நமக்கென்ன இடம்?

ஏ.ஐ.வின் ஆசீர்வாதம் எதிர்காலத்தின் தெய்வ வழிபாட்டுக்கு ஒரு முன்னோட்டமா? என்ற கேள்வி எழுகிறது.

இந்த சிந்தனைக்கு விடை தேடும் போது, நீங்கள் இருக்கும் இடத்தில் ஏற்கனவே ஏ.ஐ. உங்களை கவனித்து கொண்டிருக்கலாம்!