வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான அனுமதிகளை தீயணைப்புத் துறை வழங்கியுள்ளது.
மொத்தம் 9,549 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ள நிலையில், அவற்றில் 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2,499 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறை இயக்குநரும், டி.ஜி.பி.யுமான சீமா அகர்வால் தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு முன்கூட்டியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில் வெடிப்பொருள் சட்ட விதிகளின்படி பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் சரிபார்க்கப்பட்ட பிறகே தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
விற்பனை உரிமம் பெற விரும்பும் கடைகள் தீயணைப்புத் துறை, காவல் துறை, மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில், பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருந்ததால் 681 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டால், பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.”
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 9,177 விண்ணப்பங்கள் வந்த நிலையில், அதில் சுமார் 7,000 கடைகளுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.



Leave a Reply