தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு – தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Spread the love

வரும் தீபாவளி திருநாளில் பட்டாசுகளை வெடிக்கும் நேரம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிலையில், அதனால் ஏற்படும் காற்று, நீர், நில மாசு மற்றும் அதிக ஒலி மாசு சிறு குழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு பாதிப்பை உண்டாக்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் 23.10.2018 தேதியிட்ட உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பட்டாசுகள் (Green Crackers) மட்டும் பயன்படுத்தி, குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தீபாவளி நாளன்று அதிகாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மற்றும் மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை என இரண்டு நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இந்த விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.