பா.ஜ.க காளப்பட்டி மண்டலத் தலைவர் அறிமுக கூட்டம்
கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில், பா.ஜ.க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா கலந்து கொண்டார். இதில் பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் பல்வேறு பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மும்மொழி கொள்கை குறித்து எச். ராஜா கருத்து
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எச். ராஜா, தி.மு.க அரசு மும்மொழி கொள்கையை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, பா.ஜ.க சார்பில் கையெழுத்து இயக்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றும், அதில் பா.ஜ.க ஆதரவாளர்கள் அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அமலாக்கத் துறை (ED) சோதனை தொடர்பாக கருத்து
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அமலாக்கத் துறை (ED) சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், பொருளாதார முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ED நடவடிக்கை எடுப்பது சாதாரணம் என்றாலும், அரசு துறையின் தலைமை அலுவலகங்களில் சோதனை நடைபெறுவது புதியதென அவர் குறிப்பிட்டார்.
தற்போது ₹1,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டாலும், ஊடகங்களில் ₹4,000 கோடி முதல் ₹2 லட்சம் கோடி வரை ஊழல் தொடர்பாக தகவல்கள் பரவுகின்றன என்று தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, மது உற்பத்தி நிறுவனங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக ED அறிக்கையில் உள்ளது. மேலும், முழுமையான அறிக்கை கிடைத்த பிறகு இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என்றும் கூறினார்.
டெல்லியில் சட்டவிரோத மதுபான முறைகேடுகளுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எடுத்துக்கூறிய அவர், அதேபோல் தமிழகத்திலும் அதேபோல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
தி.மு.க அரசின் ஊழல் குறித்த விமர்சனம்
தி.மு.க அரசு அனைத்து துறைகளிலும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக எச். ராஜா குற்றம் சாட்டினார்.
பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை ஒன்றிற்கான கட்டுமானத்துக்கு ₹12,000 நிதி வழங்கப்படும். ஆனால், தி.மு.க அரசு சென்னையில் கழிவறை கட்டுவதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், அதன் பராமரிப்பு செலவாக மாதத்திற்கு ₹12,000 ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கூட அமல்படுத்தவில்லை என்று அவர் விமர்சித்தார்.
தி.மு.க ஆட்சி தமிழகத்தின் கடன் சுமையை அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.
மும்மொழி கொள்கை ஆதரவாக கையெழுத்து இயக்கம்
கூட்டத்திற்குப் பிறகு காளப்பட்டி பகுதியில் பா.ஜ.க சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகவும் நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்தில் எச். ராஜா கலந்து கொண்டார்.
Leave a Reply