கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம்- ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் விதமாக ரூ.481 கோடி செலவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. முதற்கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை வரை முதல் கட்டமாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்துப்பாலம் முதல் பொள்ளாச்சி,பாலக்காடு சாலைகளில் 2-வது கட்டமாக மேம்பாலப் பணிகள் நடைபெற்றது.
2-ம் கட்ட மேம்பாலம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. முதலில் மந்த நிலையில் நடந்த மேம்பாலப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இம்மாத இறுதியில் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட உள்ளது.
இதனிடையே இந்த மேம்பாலத்தின் ரம்யமான புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. பலரும் தடுப்புகளைத் தாண்டி, திறக்காத மேம்பாலத்தைச் சுற்றி வலம் வரத்தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் பக்ரீத் விடுமுறை தினமான இன்று குறிச்சி பிரிவு இட்டேரி பகுதி சேர்ந்த 4 சிறுவர்கள் ஒரே பைக்கில், மேம்பாலத்தைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டனர். அவர்கள் மேம்பாலத்தில் வாகனத்தில் வலம் வந்தபோது, பக்கவாட்டு தடுப்புச்சுவரில் மோதி, கீழே விழுந்தனர். இதில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தற்போது மேம்பாலத்தில் யாரும் ஏற முடியாத வகையில் தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.
Leave a Reply