திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை மேலாண்மை சீர்கேட்டையும், குப்பை வரி உயர்வையும் எதிர்த்து அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் கூறப்பட்டதாவது:
அதிமுக ஆட்சிக் காலத்தில் திருப்பூர் மாநகராட்சியில் 25 நுண் உரமாக்கல் மையங்களும், 3 உலர் கழிவு மீட்பு மையங்களும் சிறப்பாக செயல்பட்டு வந்தன. இதன் மூலம் மாநகராட்சி பகுதிகளில் உருவாகும் குப்பைகள் தரம் பிரித்து சீராக மேலாண்மை செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போதைய நிர்வாகம் அந்த மையங்களை முழுவதுமாக முடக்கியதால், ஒவ்வொரு வார்டிலும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்படும் திருப்பூர், ‘குப்பை நகரமாக’ மாறும் அபாய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குப்பை அகற்றப்படாத சூழலில் பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் அதிகரித்துள்ளது. இதிலேயே மாநகராட்சி நிர்வாகம் குப்பை வரியை 150% உயர்த்தியதோடு, வீட்டிலிருந்து தரம் பிரிக்காத குப்பை வழங்கியால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. இதை அதிமுக கண்டித்துள்ளது.
மேலும், தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் முறையாக செய்யாமல் இருப்பதையும், அதற்கு திமுக அரசு கவனம் செலுத்தாததையும் அறிக்கை கடுமையாக கண்டித்துள்ளது.
இந்தப் பிரச்சினைகளை எதிர்த்து, நவம்பர் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர் சி. சிவசாமி (முன்னாள் எம்.பி), கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அன்பகம் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதில் திருப்பூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், அணிகள், முன்னாள் மற்றும் இந்நாள் வார்டு உறுப்பினர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.



Leave a Reply