திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் நடைபெற்ற விசாரணையில், மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், தனி நீதிபதி அனைத்து தரப்புகளையும் இணைத்து விரிவாக விசாரித்த பிறகே உத்தரவு பிறப்பித்ததாகவும், அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தடையுத்தரவு பிறப்பித்து தேவையற்ற பதற்றத்தை உருவாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சட்டம்–ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் இருதரப்பும் கருத்துகளை மிகைப்படுத்தி முன்வைப்பதாக குறிப்பிட்டனர். வழிபாட்டு உரிமை கோவிலுக்கே உரியது என்றும், மலை உச்சியில் தீபம் ஏற்றுவது இந்து மத மரபாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படும் உரிமை என்றும் மனுதாரர் தரப்பு வலியுறுத்தியது.
1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மதிக்கவில்லை என்றும், தீபத்தூணை குறித்து அரசு மற்றும் அறநிலையத்துறை முரண்பட்ட விளக்கங்களை வழங்கி குழப்பம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. வக்ஃப் வாரியத்துக்கு தீபத்தூணில் உரிமை கோர அதிகாரம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.
விசாரணையின் போது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தலாமா? என நீதிமன்றம் கேட்டதாகவும், அதற்கு வாய்ப்பில்லை என்ற நிலை காணப்படுவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தன்மை மற்றும் தொடர்புடைய விவரங்களை கருத்தில் கொண்டு, திருப்பரங்குன்றம் தீபமேற்றல் வழக்கின் விசாரணை நாளையும் தொடரும் என அறிவித்தனர்.



Leave a Reply