திருப்பரங்குன்றம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

Spread the love

கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்துக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், திருப்பரங்குன்றம் சென்று பூரண சந்திரன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திருப்பரங்குன்றம் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீதிமன்ற தீர்ப்பின்படியும் பக்தர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதாகவும், 144 தடை உத்தரவு விதித்து அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்டதாகவும் எல்.முருகன் தெரிவித்தார். மேலும், தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக நோட்டீஸ் அளிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார்.

இதனிடையே, திருப்பூர் பெருமாநல்லூர் முருகன் கோவில் இடிப்பு விவகாரத்தில் கேள்வி எழுப்பிய பாஜக மாவட்ட தலைவர் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பது கூட்டணிக்கு பலம் சேர்த்துள்ளதாகவும், நடிகர் விஜய்க்கு எந்த அழுத்தமும் இல்லை என்றும், ‘ஜனநாயகன்’ தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் எல்.முருகன் கூறினார்.