திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு – தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு அறிவிப்பு!

Spread the love

திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) சார்பில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அவர்களின் உத்தரவின்படி, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் 5,000 கோவில்கள் கட்டப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவஸ்தான கோவில்களிலும் அன்னபிரசாதம் வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவிலில், ரூ.37 கோடி மதிப்பில் 100 அறைகள் கொண்ட தங்குமிட வளாகம் கட்டப்படும். அதே இடத்தில் ரூ.3 கோடி செலவில் புனித வனம் (Divine Grove) அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை பத்து நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெறும். அந்த காலத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்யும் வாய்ப்பு பெறுவார்கள்.

தரிசன டோக்கன்களை நேரடியாக வழங்குவது சிரமமாக இருக்கும் என்பதால், தொழில்நுட்ப வசதி மூலம் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை வெளியிடுவது குறித்த திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்த இறுதி முடிவை எடுக்க, குழு உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்க தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகு, அடுத்த 20 நாட்களில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான முழுமையான திட்டம் அறிவிக்கப்படும் என்று பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.

நேற்று மட்டும் திருப்பதி கோவிலில் 64,048 பக்தர்கள் தரிசனம் செய்தனர்; 19,838 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடி வசூலாகியுள்ளது. இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.