சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்த பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி, எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசு கல்வி நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரித்த அவர், “மத்திய அரசு இதுவரை இல்லாத அளவிற்கு நிதி வழங்கி வருகிறது. ஆனால் தமிழக அரசு அதன் பயன்பாட்டுக்கான சான்றிதழ்களை (Utilisation Certificate) சமர்ப்பிக்கவில்லை. அதனால் அடுத்த கட்ட நிதி வழங்க முடியாமல் இருக்கிறது” என்றார்.
மாநில அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், “வாக்குறுதி அளித்தும், 4½ ஆண்டுகள் கடந்தும் ஆசிரியர் நியமனம் செய்யவில்லை. ஆனால் காரணம் சொல்லும்போது ‘மத்திய அரசு பணம் தரவில்லை’ என அரசியல் செய்கிறது” என்றார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, “நீதிமன்றம் தடை விதித்தாலும், சட்ட ஆலோசகர்களை வைத்து வழக்கை சரியாக நடத்துவது அரசின் கடமை. நீதிமன்றத்தை காரணம் காட்டி எப்போதும் தப்பிக்க முடியாது” எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சிவசேனா நடத்திய பா.ஜ.க. எதிர்ப்பு போராட்டம் குறித்து, “அவர்களது நடவடிக்கைகள் அவர்களுக்கே உரியது; நாட்டில் நடைபெறும் விஷயங்களை மத்திய அரசு கவனிக்கும்” என்று கூறினார்.



Leave a Reply