ஆ.வெ.மாணிக்கவாசகம்
தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டு, காங்கிரசுக்கு எதிராக திமுக 137 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது .
தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 184 இடங்களையும், 1989 ஆம் ஆண்டு 150 இடங்களையும் ,1996 ஆம் ஆண்டு 173 இடங்களில் வெற்றியும், 2008-வருடம் 96 இடங்களையும் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற முழக்கத்தோடு திமுக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி ஆறாவது முறையாக தமிழகத்தை திமுக ஆட்சி செய்து வருகிறது.
மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியினர் என மொத்தம் 159 இடங்களைப் பிடித்தது. கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பதவி ஏற்றார் .
பதவி ஏற்ற உடன் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரருக்கு ரூ.4 ஆயிரம், ஆவின் பால் லிட்டருக்கு மூன்று குறைப்பு,விடியல் பயண திட்டமான மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், பொதுமக்கள் மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெற. அரசே பணம் செலுத்தும் ஆகிய ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில்
அடியெடுத்து வைத்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குறிப்பிடுகையில்,தி.மு.க.வின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில்,
அனைத்து தரப்பு மக்களும் மன மகிழ்ச்சியில் இருப்பதாக கூறியிருந்தார்.
தேர்தல் வாக்குறுதிகள்
தமிழகம் மற்றும் தமிழக மக்கள் நலன் சார்ந்த 521 தேர்தல் வாக்குறுதிகளாக,திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.
இந்த அறிக்கையில் உள்ள பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அனைவருக்கும் உரிமை தொகை
திமுக தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய அறிவிப்பாக இடம் பெற்றது அனைத்து மகளிருக்கு மாதம் தோறும் ரூ. ஆயிரம் திட்டமாகும்.
திமுக அரசு பதவி ஏற்ற போது, கடும் நிதி சுமை இருப்பதாக கூறி ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தினை தாமதப்படுத்தி வந்தது.இதனால், மகளிரின் எதிர்பார்ப்பு நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றத்தில் இருந்தனர். அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, பெண்களுக்கான ரூ ஆயிரம் வழங்கும் திட்டத்தினை எப்பொழுது அறிவித்து நடைமுறைப்படுத்துவீர்கள் என அவ்வப்போது கேட்டு வந்தனர்.
அரசின், நிதி நிலைமை சீரான பின் மகளிர் காண மாதத் தொகை வழங்கப்படும் என முதல்வரும், அப்போதைய நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜனும் தெரிவித்தனர்.
ஈரோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தின் போது, மகளிர் காண நிதி அளிக்கும் திட்டத்தினை பேசு பொருளாகி, தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.
இதனால் மாதம் ரூ.ஆயிரம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு திமுக அரசு தள்ளப்பட்டதை அடுத்து,பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் முதல் ரூ. ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் அறிவித்தார்.
இடைத்தேர்தல் முடிந்த பின்பு, இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவித்த போது, அனைவரும் அதிர்ச்சியாகினர். காரணம் தகுதி உள்ள, பெண்களுக்கு மட்டும் ரூ ஆயிரம் வழங்கப்படும் உள்ளிட்ட பல விதிமுறைகள் அதில் கூறப்பட்டிருந்தது.
இறுதியாக ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு ஆயிரம் வழங்குவதென அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது தற்போது வரை மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்தல் அறிக்கையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஒரு கோடியை 95 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாக்கியுள்ள மகளிருக்கும் மாதம் ரூ ஆயிரம் வழங்க வேண்டும் என்ற வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டுமென திமுக அரசியல் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது.
அரசு ஊழியர்கள் பல போராட்டங்கள் செய்த போதும், தமிழக அரசு இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அப்போதைய நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது இயலாத ஒன்று என தெரிவித்தது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அரசு ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மேலும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக அரசு ஊழியர்கள் சார்பில் அறிவித்திருந்தனர்.
இது குறித்து, அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்தித்து பேசியதன் விளைவாக, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பொதுத் தேர்தல் வந்ததால் அரசு ஊழியர்கள் தேர்தலை நடத்துவதில் மும்மராமாயினர்.
அரசு ஊழியர்களின் இந்த முக்கிய கோரிக்கையினை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ரூ. 100 குறைப்பு
திமுக தேர்தல் அறிக்கையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.நூறு மானியம் வழங்கப்படும் என என அறிவித்திருந்தது. தற்போது மூன்று ஆண்டுகள் முடிவடைந்த பின்பும், அரசு இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாதது, பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம், மகளிர் தினத்தை ஒட்டி மத்திய அரசு வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ஒரு நூறு குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசும், ரூ .100 ரூபாயினை குறைத்து அரசு விரைவில் அறிவிப்பு அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
கல்விக்கடன்
கல்லூரிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அறிவித்திருந்தனர்.
இது பற்றிய எதிர்பார்ப்பும், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தாங்கள் வங்கியில் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்வதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாணவர்கள் தரப்பிலிருந்து எதிர்பார்ப்பு தொடர்கிறது.
நீட் தேர்வு
தமது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக அறிவித்திருந்தது.
ஆட்சிக்கு வந்த பின்பு சட்டமன்றத்தில் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் இன்று வரை நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இது போன்ற முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு, கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும் என்பதை பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Leave a Reply