திமுக ஆட்சியை விரடட எடப்பாடியார் பின்னால் திரளும் மக்கள் – முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி பேச்சு

Spread the love

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்காம் கட்ட சுற்றுப்பயணமாக கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளுக்கு 9ஆம் தேதியும், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கு 10ஆம் தேதியும், சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கும் 13ஆம் தேதியும் வருகை தருகிறார்.

இதையடுத்து கோவை இதயதெய்வம் மாளிகையில் கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி.வேலுமணி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் எஸ் பி.வேலுமணி பேசுகையில்,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். அதைத்தொடர்ந்து கவுண்டம்பாளையம், கோவை வடக்கு , கோவை தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து திமுக ஆட்சியை விரட்ட தமிழகமெங்கும் இலட்சிய பயணத்தை எடப்பாடியார் மேற்கொண்டு வருகிறார்.

அவர் செல்லும் இடமெங்கும் அலைகடலென மக்கள் திரண்டு வரவேற்பு அளித்து வருகின்றனர். இது திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்து தான் வரவேற்பு அளித்து வருகிறார்கள். திமுக ஆட்சி கடந்த நான்கரை ஆண்டுகளில் எந்த ஒரு திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. மக்கள் விரோத ஆட்சியை தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக நடத்துகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களையும் முடக்கிவிட்டது.

ஆனால் . அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகாலத்தில் காணாத வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினார். அத்திக்கடவு அவினாசி திட்டம், மேம்பாலங்கள் சாலைகள் விரிவாக்கம், அரசு கலைக் கல்லூரிகள், அரசு மருத்துவமனை மேம்பாடு, குடிநீர் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றினார்.

ஆனால் திமுக ஆட்சியில் தமிழக மக்கள் தினந்தோறும் வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டு வருகின்றனர். அனைத்து வரிகளும் உயர்ந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா விற்பனை, பாலியல் கொடுமை என தினந்தோறும் அரங்கேறி வருகிறது.

எனவே, திமுக ஆட்சியை விரட்ட தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஆகவே எடப்பாடி பழனிச்சாமியின் லட்சிய பயணத்திற்கு மக்கள் அலைகடலென திரண்டு வருகின்றனர். வருகிற ஒன்பதாம் தேதி நான்காம் கட்ட சுற்றுப்பயணமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார். அதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கோவை மாவட்டத்திற்கு நான்காம் கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத அளவில் மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும். அதிமுக ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் வரவேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். அவர்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும். ” என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் என்.கே. செல்வத்துரை, மாவட்ட இணைச் செயலாளர் எஸ். மணிமேகலை, மாவட்ட பொருளாளர் என்.எஸ். கருப்புசாமி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜி.கே.விஜயகுமார், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்த ராஜன், பாஜக மாவட்ட தலைவர் சந்திரசேகர், பாஜக தொகுதி பொறுப்பாளர்கள் பாலகணேஷ், ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.