திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு, தமிழகம் போதைப் பொருட்கள் புழக்கத்தின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான திமுக அரசைக் கண்டித்தும்; போதைப்பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க குனியமுத்தூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய போதைப்பொருள் அதிகரித்து வருகிறது,திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு 2000 கோடிக்கு மேல் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் ஒரு துளி கூட போதை பொருள் இருக்கக் கூடாது.
அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் வாயிலாக திமுக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மாணவர்களின் சீரழிந்து கொண்டிருப்பதை தடுக்க வேண்டும், இந்த அரசு விழித்துக் கொண்டு போதை பொருளை தடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
Leave a Reply