திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? – அண்ணாமலை கேள்வி

Spread the love

தமிழகத்தில் திமுக அரசு நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதையொட்டி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை 68% அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஜாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு ஆண்டுகளாக புறக்கணித்துவிட்டு, தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்ததாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதையும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

“ஏற்கனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தைச் செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தும், கடந்த நான்கு ஆண்டுகளில் அது மூன்று முறை மட்டுமே கூடிவிட்டது. மாவட்ட ஆட்சியாளர் குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி குழு போன்றவை செயலற்று இருக்கும் நிலையில் மீண்டும் புதிய ஆணையம் அமைப்பது ஏன்? மக்களை ஏமாற்றும் நடவடிக்கைதான் இது” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை தனது குற்றச்சாட்டில், “திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால் மக்களுக்கு இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை; மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்படுகின்றன” என்றும் தெரிவித்தார்.