துணை ஜனாதிபதி தேர்தலில் NDA கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி நாடு முழுவதும் பாஜக சார்பில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்றைய தினம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதாரண தொண்டராக இருந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய சி.பி. ராதாகிருஷ்ணன் நிச்சயமாக வெற்றி பெற்று துணை குடியரசுத் தலைவராக பதவி ஏற்க உள்ளார். ஒரு தமிழராக அவர் அந்த பதவியை வகிப்பது பெருமை” என்று கூறினார்.
தொடர்ந்து, “தமிழ், தமிழர் என்று பேசும் திமுக, இன்று துணை குடியரசுத் தலைவராக தமிழர் நிற்கும்போது அவர்களுக்கு ஆதரவு அளிக்காமல் துரோகம் செய்கிறது. தமிழர்களுக்கு எதிராக செயல் படும் திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் வரலாறு மன்னிக்காது” என வானதி சீனிவாசன் சாடினார்.
மேலும், NDA கூட்டணியை பலப்படுத்த அனைவரையும் ஒன்றிணைக்க பாஜக செயல்பட்டு வருவதாகவும், கூட்டணிக்குள் இருக்கும் குழப்பங்கள் சரி செய்யப்பட்டு திமுகவுக்கு எதிராக வியூக ரீதியாக போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைவர்கள் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, “எதிர்க்கட்சித் தலைவர் தேசிய தலைவர்களை சந்திப்பது இயல்பு. ஆனால் மற்ற தலைவர்கள் டெல்லி செல்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? ஆதாரம் இல்லாமல் நீங்கள் பிரேக்கிங் நியூஸ் வைக்கிறீர்கள். அதற்காக நான் கருத்து சொல்ல முடியாது” எனக் கூறினார்.
விஜய் தொடர்பான கேள்விக்கு, “அதை அடுத்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறேன். இன்று சி.பி. ராதாகிருஷ்ணன் பற்றியதே செய்தி” என்று தெரிவித்தார்.



Leave a Reply