தாய் கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை – செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு

dhashwanth
Spread the love

பொள்ளாச்சி சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்த், தனது தாயை கொலை செய்ததாக இருந்த வழக்கில் குற்றமற்றவர் என தீர்ப்பளித்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 28) விடுதலை செய்துள்ளது.

சென்னை மாங்காடு அருகே மவுலிவாக்கத்தில் வசித்து வந்த 6 வயதான ஹாசினி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி காணாமல் போனார். போலீசார் விசாரணையில், அதே குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தஷ்வந்த், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பின்னர் உடலை தீ வைத்து எரித்தது உறுதியாகியது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் போது ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், குன்றத்தூரில் வசித்து வந்த தனது தாயார் சரளாவை, செலவுக்காக பணம் தரவில்லை என்ற காரணத்தால் கொலை செய்து, அவர் அணிந்திருந்த 25 பவுன் நகைகளை எடுத்து தப்பியோடியதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் மாங்காடு போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தொடர்ந்து தாயார் சரளா கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 முதல் விசாரணையாகி வந்தது. இன்று மாலை 3 மணிக்கு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தீர்ப்பு வழங்கியபோது, தாயை கொலை செய்ததை நிரூபிக்கும் நேரடி சாட்சி ஏதுமில்லாததையும், தஷ்வந்தின் தந்தை சேகர் பிறழ்ந்த சாட்சி அளித்ததையும் கருத்தில் கொண்டு தஷ்வந்தை விடுவிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்று, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. தற்போது, உச்ச நீதிமன்றத்தில் தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளதுடன், தூக்கு தண்டனையில் இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.