தவெக தலைமை எச்சரிக்கை: பரப்புரையில் ஒழுங்கு கடைப்பிடிக்க வேண்டும்!

Spread the love

சென்னை: வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரப்புரை பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைமை, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது கழகம் மக்கள் நம்பிக்கையின் உச்சமாக மாறியுள்ளதாலும், தற்போது நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய அளவுக்கு முக்கியமானதாக்கியுள்ளது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிவுறுத்தலின் முக்கிய அம்சங்கள்:

  1. கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் எந்தவிதமான செயல்களும் தொண்டர்களால் செய்யப்படக்கூடாது.

  2. வீடு வீடாக செல்லும் பரப்புரையில், தலைமைக் கழகம் ஒப்புதல் அளித்த ஸ்டிக்கர், வாசகங்கள் மற்றும் படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

  3. அங்கீகரிக்கப்படாத பேனர்கள், வாசகங்கள், படங்களை எந்த நிகழ்விலும் பயன்படுத்தக் கூடாது.

  4. பொதுக் கூட்டங்களில் பட்டாசு வெடிப்பு போன்ற செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

  5. பரப்புரை மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் பொழுது, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு, கழகத் தோழர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

“மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் திரு. விஜய் அவர்களின் தலைமையில், நம் கழகம் புதிய வரலாற்றைப் படைக்கப்போகிறது. அதற்காக ஒவ்வொரு தொண்டரும் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்,” என பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய நெறிமுறைகளை மீறும் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.