தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Spread the love

தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்,

தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பணி நிலைப்பு வழங்கப்படும் என 2021 தேர்தலில் வாக்குறுதி அளித்தும், ஆட்சியில் அமர்ந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாதது சுரண்டல் என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், உச்சநீதிமன்றம் தற்காலிக அடிப்படையிலான பணியமர்த்தல்களை உழைப்புச் சுரண்டல் என கண்டனம் தெரிவித்திருப்பதை நினைவுபடுத்திய அவர், இதற்கு பிறகாவது தமிழக அரசு திருந்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 7,500க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள், அரசு பள்ளிகளில் 14,000க்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்கள், பல்வேறு துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் தற்காலிகமாக பணி செய்து வருவதாகவும், இவர்களுக்கு பணி நிலைப்பு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்காலிக ஊழியர்களை சுரண்டும் திமுக அரசின் அணுகுமுறைக்கு மன்னிப்பே கிடையாது என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.