திருச்சி மாவட்டம் அழகிரிபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை தற்போது சேதமடைந்து பாசனத்திற்கான நீர் வீணாக கடலில் கலப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விவசாயிகள் அனுபவிக்கும் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசை கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“அழகிரிபுரத்தில் விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராடும் காணொளி மனதை கனக்க வைக்கிறது. தரமற்ற தடுப்பணை, அரசு அலட்சியத்தால் சேதமடைந்துள்ளதோடு, விவசாயிகளின் பாசன நீர் வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்,
“தரமற்ற கட்டுமானம், பராமரிப்பு இல்லாத நெல்மூட்டைகள், தூர்வாரப்படாத பாசன வாய்க்கால்கள் என விவசாயிகள் ஏற்கனவே பல நஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகளை தொடர்ந்தும் புறக்கணிப்பது நீதியல்ல,” என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் கிடப்பில் உள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்தவற்றை உடனடியாக சீரமைப்பதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.



Leave a Reply