தமிழ்நாட்டில் வரிவிதிப்பு மற்ற மாநிலங்களை விட குறைவு – அமைச்சர் கே.என்.நேரு கோவையில் பேட்டி

Spread the love


கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை வழங்கினார்.

செம்மொழி பூங்கா முழுமையாக முடிந்து மக்களுக்கு பயன்பாட்டிற்கு வருவதற்காக முதலமைச்சரின் ஆலோசனையை ஏற்று, கூடுதலாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும், பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதோடு, ஆர்.எஸ்.புரம் மாதிரி பள்ளியில் ரூ.2.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாணவர் விடுதியையும், ரூ.1.96 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைகளையும் திறந்து வைத்தார். கோவையில் சர்வதேச தரத்தில் உருவாகி வரும் ஹாக்கி மைதானம், கவுண்டம்பாளையம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், குறிச்சி-குனியமுத்தூர் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்து விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் நிலத்தடி நீர் மாசடைதலைத் தடுக்கும் வகையில், ரூ.69.20 கோடி மதிப்பில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதோடு, ரூ.250 கோடி மதிப்பில் வேஸ்ட்-டு-எனர்ஜி (Waste to Energy) திட்டமும் கோவையில் துவங்கப்படவுள்ளதாகவும், பிளாஸ்டிக் கழிவுகளை மின்சாரமாக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மீதமுள்ள கழிவுகளை உரமாக்கும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கோவை, மதுரை ஆகிய இடங்களிலும் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

திருச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதாகவும், மீதமுள்ள பகுதிகள் அடுத்த 6 மாதங்களில் முடிவடையும் என்றும், ஒவ்வொரு வீட்டிற்கும் இணைப்புகள் வழங்குவதில் சில சவால்கள் உள்ளன எனவும் அவர் விளக்கினார்.

கோவையில் வரி அதிகரிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரிவிதிப்பு மிகக் குறைவு. உதாரணமாக, மகாராஷ்டிராவில் 14,000 வரிகள் விதிக்கப்படுகின்றன, ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 2,000 தான். சட்டமன்றத்தில் இதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 600 சதுர அடிக்கு குறைவான வீடுகளுக்கு எந்த மாற்றமும் இல்லை. 600 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கே மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் அவர், “குப்பை வரி, சொத்து வரி ஆகியவை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே விதிக்கப்பட்ட வரி குறைவு தான். தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக்காட்டினால் உடனடியாக திருத்தம் செய்யப்படும். ஆனால், வரி எங்கும் உயர்த்தப்படவில்லை” என்றும் தெளிவுபடுத்தினார்.