கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது திமுக அரசையும் அதன் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்தார்.
சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பெருமையாகக் குறிப்பிட்ட தமிழிசை, “தமிழரை உயர்ந்த பதவியில் அமர்த்தியுள்ளோம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழரையே ஏமாற்றும் ஆட்சி நடைபெறுகிறது. திமுக தமிழர்களுக்கு எவ்வித ஆதரவும் வழங்கவில்லை, வரலாறு இதை மன்னிக்காது” என்று கூறினார்.
“முப்பெரும் விழா நடத்தினாலும், நாப்பெரும் விழா நடத்தினாலும் திமுகவுக்கு இனி வெளியேற்றமே. No Re-entry for DMK என்று உறுதியாகச் சொல்லலாம்,” என அவர் வலியுறுத்தினார்.
ஜிஎஸ்டி குறித்து பேசும் போதே, “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி இந்திய பொருளாதாரத்தில் புரட்சியை கொண்டு வந்துள்ளார். அதற்காக தமிழக அரசு ஒருமுறை கூட நன்றி கூறியதுண்டா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
செந்தில்பாலாஜியை சுட்டிக்காட்டிய தமிழிசை, “200, 300, 400 என்று சொல்ல பழகியவர்கள் நீங்கள் தான். அதனால் தான் தோல்வி நிச்சயம். ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்களை முதலில் நீக்குங்கள். வழக்கு போட்டவரை இன்று பாராட்டுகிறீர்களே?” என்று விமர்சித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினையும் குறிவைத்த அவர், “ஜிஎஸ்டி விலக்கு குறித்து சந்தைக்கு சென்று வாங்கிய பிறகு மத்திய அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும். உதயநிதி ஸ்டாலின் செங்கல் தூக்கிக்காட்டுகிறார். ஆனால் பாஜக செங்கோலை உறுதியாக வைத்திருக்கிறது; அதை புடுங்க முடியாது,” எனக் கூறினார்.
அதிமுக-பாஜக கூட்டணியைப் பற்றி, “இது வராது என்று நினைத்தவர்கள் இப்போது பதற்றமடைந்துள்ளனர். கூட்டணி அமைந்துவிட்டது. எதிர்க்கட்சிகள் பிளவில்தான் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால், பாஜக மக்கள் நம்பிக்கையில்தான் வெற்றி பெறும்,” எனக் குறிப்பிட்டார்.
அதே சமயம், ஆனைகட்டி பகுதியில் மிருக வாழ்விடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தமிழிசை, “வனத்துறையும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. யானைகளையும் மிருகங்களையும் வாழவிட வேண்டும்,” என வலியுறுத்தினார்.
இறுதியாக, தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, “வாக்குச்சீட்டு சீர்திருத்தம் தமிழகத்தில் அவசியம். திமுக வெற்றியடைந்தது மறைந்த தலைவர்களின் பெயரை பயன்படுத்தியதால்தான். இனி அது நடைபெறாது. பாஜக உழைப்பால் வெற்றி பெறும்,” என அவர் தெரிவித்தார்.



Leave a Reply