தமிழ்நாட்டின் 11.19% வளர்ச்சி விகிதம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம் – டி.ஆர்.பி. ராஜா கடும் பதில்

Spread the love

மத்திய அரசு வெளியிட்ட சமீபத்திய திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமையாகக் குறிப்பிட்டு, “இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு” என வலியுறுத்தினார்.

இந்த வளர்ச்சி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியுடன், “இது ஒரு மாயவிளம்பரம்” என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அவரது எக்ஸ் (X) தளப்பதிவில்: “தமிழ்நாட்டின் 11.19% வளர்ச்சி என்பது மக்கள் மற்றும் முதலமைச்சரின் கடுமையான உழைப்பின் விளைவாகும். இவ்வளர்ச்சியை வைத்து பெருமைப்பட வேண்டிய நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார்,” எனக் கடும் விமர்சனம் மேற்கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில்: “பாஜகவைப் போலவே அதிமுகவும், தமிழ்நாட்டின் நல்ல செய்தியை விமர்சிப்பதை ஒரு வாடிக்கையாக வைத்துள்ளது. முதலீடுகள், வேலைவாய்ப்பு, மகளிர் நலம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திராவிட மாடல் கொள்கையால் தான் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. மின்சார கட்டண உயர்வைப் பற்றி பேசும் அதிமுக தலைவர், கடந்த காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்ததை மக்கள் மறக்கவில்லை.”

அவரது பதிவில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு விரிவான மறுப்பும், திராவிட அரசின் வளர்ச்சி மாடலுக்கும் உறுதியான ஆதாரங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளன.