தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு

nainar nagendran
Spread the love

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், நயினார் நாகேந்திரன் ஒரே வேட்பாளராக இருந்து, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் ஆரம்பித்தவர். 2001-ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராக பணியாற்றினார். 2011-ம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் முக்கியத்துவம் இல்லாததாக நயினார் நாகேந்திரன் உணர்ந்தார். அதன் தொடர்ச்சியாக, 2017-ஆம் ஆண்டு அதிமுகவை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததையடுத்து மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றிபெற முடியவில்லை. பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

தற்போது, தனது நீண்ட அரசியல் அனுபவத்துடன் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.