பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் “டிராமா” செய்கிறது என்றும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும் எனவும், கோவை MyVi3 நிறுவன குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும், 50 சதவீதத்திற்கும் மேலாக பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார். ஆனால், முதல்வர் இதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார் எனவும், பெண்கள் பகலிலும் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளது எனவும் கூறினார். தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதால், பள்ளி, கல்லூரிகளின் வெளியே கூட இவை விற்கப்படும் அளவிற்கு மோசமான நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
தர்மபுரியில் உள்ள திமுக மாவட்ட செயலாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மிரட்டல்களுக்கு ஆளாகி வருவதாகவும், இதுவரை முதல்வர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். YouTuber சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, அதேபோல் திமுக மாவட்ட செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது எனவும் விமர்சித்தார்.
மேலும், தமிழக அரசுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரம் இருந்தும், கணக்கெடுக்க அதிகாரம் இல்லை என முதல்வர் கூறுவது சரியல்ல என்றும், தமிழக அரசு கோழைத்தனமாக செயல்படுகிறது என்றும் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்பதே பாமகவின் மத்திய அரசுக்கான கோரிக்கை எனவும் கூறினார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி வழங்குவோம் என அறிவித்ததை ஏற்க முடியாது எனவும், மொழியை திணிக்கக்கூடாது, ஆனால் கற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார். திமுக இந்தி திணிப்பு வேண்டாம் எனக் கூறுகிறது, ஆனால் தமிழுக்காக எதைச் செய்திருக்கிறது? எனக் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் பெயர் மட்டும் தமிழ்நாடு, ஆனால் தமிழ் மொழியில் பட்டம் பெற முடியாத நிலை உள்ளது எனவும் விமர்சித்தார்.
தமிழ் கல்விக்காக பள்ளிகளில் பாடங்கள் அறிமுகப்படுத்த முயன்றவர், அவரது தந்தை மருத்துவர் ராமதாஸ் எனவும், தமிழக அரசு கல்விக் கொள்கையில் “டிராமா” நடத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார். திமுக அரசு கல்விக்காக 2100 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்க முடியாதா? எனவும், தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை அரசு எடுத்து நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டுக்கவலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவர் பதிலளிக்கையில், “காவல்துறைக்கு பல முக்கிய வேலைகள் உள்ள நிலையில், சீமான் வீட்டுக்குச் சென்று கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார். கோவை MyVi3 நிறுவனம் 2600 கோடி ரூபாயை மக்களிடம் மோசடி செய்துள்ளது என்றும், பாமக நிர்வாகிகள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும் விமர்சித்தார்.
அந்த நிறுவனத்தின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், மக்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லையெனில் பாமக போராட்டம் நடத்தும் எனவும் எச்சரித்தார்.
செய்தியாளர்கள், “தமிழக அரசு டிராமா நடத்துகிறது” என்ற உங்கள் விமர்சனைக்கு என்ன ஆதாரம்?” என கேட்டதற்கு, “அது பாமகவின் கருத்து, உங்களுக்கு ஏன் வலிக்கிறது?” என பதிலளித்தார். பின், “ராமதாஸ் ஐயாவுக்கும், அன்புமணிக்கும் இடையே உள்ள உறவு எப்படி?” என்ற கேள்விக்கு அவர் சிரித்துக்கொண்டே பதிலளிக்காமல் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு புறப்பட்டார்.
Leave a Reply