தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

Spread the love

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் கல்வி கற்றுவருகின்றனர்.

இப்பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா வரும் செப்டம்பர் 3-ம் தேதி காலை நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார்.

இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு அதே தினம் காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் மதியம் 12.30 மணிக்கு வருகை தருகிறார். மதிய உணவுக்குப் பிறகு, மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

அங்கு மத்திய பல்கலைக்கழக அளவில் கோல்டு மெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் சென்று, அங்குள்ள பிரத்யேக ஹெலிபேட் தளத்தில் இறங்கி, பின்னர் காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்.

பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு காரில் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். குடியரசுத் தலைவர் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.