தமிழகத்தை ஆக்கிரமிக்கும் கேரளா ; சுருங்கும் நீலகிரியால் கொந்தளிக்கும் சீமான்

Spread the love

தமிழக – கேரளா மாநில எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் பந்தலூர் அருகே உள்ள தாளூர் பகுதி கேரளா மாநில எல்லையை ஒட்டியிருக்கிறது. இங்கு?  கடந்த மார்ச் 5 ஆம் தேதி  கேரளா மாநில அதிகாரிகள் தமிழக எல்லைக்குள் நுழைந்து, கேரளா மாநிலத்தின் புதிய வரவேற்பு பலகையை மலையாளத்தில் வைத்தனர். இது நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து  நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், ” கேரளா அரசு புதிதாக வைத்துள்ள  பெயர் பலகை உடனடியாக அகற்றி விடுவோம் .  இரு மாநில நில அளவை துறையினர் ஆய்வு செய்வார்கள் .  மக்கள் பதற்றமடைய தேவையில்லை. தற்போது வைக்கப்பட்ட பெயர் பலகையை அகற்ற உத்தரவிட்டிள்ளேன்.  ஒரு வேளை பெயர்ப்பலகை அகற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”  என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்

” தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. அந்த பலகை உடனடியாக அகற்றப்படாவிட்டால் மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் . கடந்த 2017 ஆம் ஆண்டு, கேரள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தமிழ்நாட்டின் தாளுர் எல்லைக்குள் 200 மீட்டர் தூரம் அத்துமீறி நுழைந்து, அந்த இடம் வரை தங்களுக்கு சொந்தமானது என்றுகூறி கேரள மாநில அரசு மலையாள மொழியில் அறிவிப்பு பலகையை வைத்தது. அந்த பலகையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைத்து அகற்றியது. 2023 ஆம் ஆண்டு மீண்டும் கேரள அரசு தமிழக எல்லைக்குள் அறிவிப்பு பலகையும் புதிய பேருந்து நிலையமும் அமைக்க முயன்றதையும் நாம் தமிழர் கட்சி போராடி தடுத்து நிறுத்தியது.இந்நிலையில், மீண்டும் தமிழக எல்லைக்குள் புகுந்து  தமிழ்நாடு அரசு தமிழில் வைத்த அறிவிப்பு பலகையை உடைத்து எறிந்துவிட்டு, கேரள அரசு மலையாள அறிவிப்பு பலகையை அத்துமீறி வைத்துள்ளது. பலகைக்கு கேரள போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு எல்லை பலகையை காக்கத் தவறிய தமிழ்நாடு காவல்துறையோ, எல்லை மீட்புக்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்துகிறது.
தமிழ்நாடு எல்லையைப் பாதுகாக்க திறனற்ற திமுக அரசு போராடும் நாம் தமிழர் கட்சியினரை அடக்கி ஒடுக்குவது ஏன்?
இதுதான் திமுக அரசு மண்ணையும், மானத்தையும் காக்கும் முறையா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.