, , ,

தமிழகத்தில், 99 சதவீத போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது-தமிழக அரசு தெரிவிப்பு

CCTV camera
Spread the love

தமிழகத்தில், 99 சதவீத போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் பத்திரப்படுத்தப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நிஜாமுதீன் தாக்கல் செய்த மனுவில் துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில், போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் திருத்தப்பட்டதாக, செய்திகள் வெளியாகின. இதேபோல, போலீஸ் நிலையங்களில் நடக்கும் அத்துமீறல்களை கண்காணிக்க, ‘சிசிடிவி’ என்ற கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதுடன், அந்தப் பதிவுகளை பத்திரப்படுத்த, உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என மனு கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின் போது, காவல்நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். எனவே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் காமிரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், மாநிலம் முழுதும் உள்ள, 1,500க்கு மேற்பட்ட போலீஸ் நிலையங்களில், அதாவது, 99 சதவீத போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் பதிவுகளும் முறையாக பத்திரப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.