,

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழு

michuang
Spread the love

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பட்டாளம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆய்வு நடத்தினா்.

இன்றைய அய்வு முடிந்த பின்னர் பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி கூறியது: “மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் வந்துள்ள எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். புயல் மற்றும் கனமழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதை அறிகிறோம். மாநில அரசின் வெள்ள மீட்பு பணிகள் பாராட்டத்தக்கது. தண்ணீர் தேங்கிய இடங்களில் இருந்து தண்ணீரை அகற்றியது, மின் விநியோகத்தை சீராக்கியது, தொலைத்தொடர்பு சேவை பாதிப்புகளை சரிசெய்தது என அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்துள்ளது. அதற்காக, மத்திய அரசின் சார்பாக எங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

மேலும், “இந்த ஆய்வு முடிந்த பிறகு, தமிழக அரசிடம் வெள்ளச் சேதங்கள் மற்றும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த அனைத்து ஆவணங்களையும் கேட்டுள்ளோம். அதன்பிறகு, எங்கள் குழுவில் மத்திய அரசின் 6 அமைச்சகங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் உடன் கலந்து ஆலோசித்தப் பின்னர், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மத்திய குழு அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும். ” என்று பேசினார்.