தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பஸ் சேவை ரத்து

Spread the love

சென்னை, கோவை, மதுரை எனப் பல பகுதியிலிருந்து கேரளாவிற்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பயணம் செய்த பயணிகளையும் நடுவழியிலேயே இறக்கவிட்டதால், அவர்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தலா 2 லட்சம் வரை அபராதம் என மொத்தம் ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டும் வரை தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையும், ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்லும் சீசன் நெருங்குவதால் அதுவும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடக உள்ளிட்ட பிற மாநில பேருந்துகளும் கேரள போக்குவரத்துத் துறையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவின் கட்டாய மாநில சாலை வரிகளைச் செலுத்தாமல் பல ஆம்னி பேருந்துகள் பிற மாநிலங்களிலிருந்து வந்து கேரளா சாலையைப் பயன்படுத்துவதாக கடந்த சில மாதங்களாகவே எச்சரிக்கை விடுத்து வந்தது கேரள மோட்டார் வாகனத் துறை . கேரள மோட்டார் வாகனத் துறை நடத்திய சோதனையில் தமிழ்நாட்டு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல பேருந்துகள், மாநில சாலை வரிகளைச் செலுத்தாமல் இயக்கப்படுவதைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிரமத்திற்குள்ளான பயணிகள் உரிய இடத்தில் தங்களை இறக்கிவிடச் சொல்லியும், இல்லையென்றால் டிக்கெட் பணத்தைத் திரும்பத் தரச் சொல்லியும் சம்பவ இடத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பலன் இல்லை.

தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம், இவ்வளவு பெரிய தொகையை உரிமையாளர்களால் செலுத்த முடியாது. தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதுவரை கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது” என்று தெரிவித்திருக்கிறது.