கடந்த 1990ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன்முதலாக மார்வன் அட்டப்பட்டு அறிமுகமானார். ஆனால், முதன் இன்னிங்சில் டக் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்சிலாவது ரன் அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். அவரது போதாத வேளை, இரண்டாவது இன்னிங்க்ஸிலும் டக் அவுட் ஆனார். உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து மீண்டும் உள்ளூர் ஆட்டத்துக்குத் திரும்பினார். மீண்டும் நெட்பிராக்டிசில் தன்னை அர்ப்பணித்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் மார்வன் அட்டப்பட்டு பட்டையைக் கிளப்ப, 21 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார்.
இந்த முறையும் முதல் இன்னிங்சில் டக் அவுட். இரண்டாவது இன்னிங்சில் 1 ரன் மட்டுமே அடித்தார். மீண்டும் இலங்கை அணியை விட்டு வெளியேற்றப்பட்டார். அடுத்து உள்ளூர் ஆட்டத்துக்கு திரும்பிய அட்டப்பட்டு தீவிர நெட் பிராக்டிசில் ஈடுபட்டார். 17 மாதங்களுக்கு பிறகு, அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையாவது, சோபிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். முதல் இன்னிங்சில் டக் அவுட், இரண்டாவது இன்னிங்சில் டக் அவுட்டோடு அந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. மனிதர் ரொம்பவே நொந்து போனார்.
அவ்வளவுதான், இனிமேஸ் அட்டப்பட்டுவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போனது என்றே அனைவரும் கருதினர். அட்டப்பட்டுவோ எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாமல் மீண்டும் உள்ளுர் ஆட்டங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இலங்கை அணிக்காக சர்வதேச ஆட்டத்தில் விளையாட வேண்டுமென்ற ஆசையை குழி தோண்டிப் புதைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சரியாக மூன்று ஆண்டுகள் கழிந்தது. இலங்கை அணித் தேர்வாளர்கள் மீண்டும் அட்டப்பட்டுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினர். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அட்டப்பட்டு, அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்த தொடங்கினார். கிட்டத்தட்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது ரன்னை எடுக்க மட்டும் அவர் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருந்தது. இலங்கை அணி தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பை வழங்க, டெஸ்ட் கிரிக்கெட்டை தெளிவாகக் கற்றுக் கொண்டார். விளைவாக நங்கூரம் போல நின்று ஆடும் கலையை கற்று தேர்ந்தார்
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 7 ஆண்டுகளுக்கு பிறகே – அதாவது 1997ம் ஆண்டு – தனது முதல் சதத்தை, இந்தியாவுக்கு எதிராக அவர் பூர்த்தி செய்தார். பின்னர், படிப்படியாக தனது ஆட்டத்திறனை மெருகேற்றிய அவர், ஒரு கட்டத்தில் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். டெஸ்ட் போட்டியில் மட்டும் 5,502 ரன்களை எடுத்துள்ளார். இதில், 16 சதங்கள் ஆறு இரட்டை சதங்களும் அடங்கும் ஒருநாள் போட்டியில் 268 ஆட்டங்களில் 8,529 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 11 சதங்கள் 59 அரை சதங்களும் அடங்கும்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சக்கட்டமாக 1996ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியிலும் அட்டப்பட்டு இடம் பிடித்திருந்தார். 2007ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு, இலங்கை அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். மார்வன் அட்டப்பட்டுக்கு நடந்தது போல வேறு எந்த கிரிக்கெட்டருக்கும் மோசமான தொடக்கம் அமைந்திருக்காது என்று கிரிக்கெட் ரசிகர்கள் பேசிக்கொள்வதுண்டு. நம்பிக்கையுடன் போராடினால் வெற்றி நிச்சயம் என்பது அட்டப்பட்டுவின் கிரிக்கெட் வாழ்க்கை நல்ல உதாரணம்.



Leave a Reply