தலைநகர் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் நுழைவு வாயில் – 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு, பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெடிப்பு நிகழ்ந்த சில வினாடிகளில் அருகிலிருந்த மற்றொரு காரும் வெடித்தது. இதனால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் நான்கு வாகனங்கள் தீப்பற்றி முழுமையாக எரிந்தன.
இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 3 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ தகவல் கிடைத்ததும் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ முழுமையாக அணைக்கப்பட்டபின்பு, காவல் துறை, NIA மற்றும் குண்டு நிபுணர் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த இந்த கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக, டெல்லி அருகே 350 கிலோ வெடி மருந்துகள் மற்றும் AK-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



Leave a Reply