டெல்லியில் மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம் — வரும் நாட்களில் “மிகவும் மோசம்” நிலைக்கு செல்வதாக எச்சரிக்கை

Spread the love

டெல்லியின் காற்றின் தரம் இன்று மீண்டும் கடுமையாகக் குறைந்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்ட தகவலின்படி, நகரத்தின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 264 ஆக உயர்ந்து, ‘மோசமான’ பிரிவில் நிலைத்து உள்ளது.

டெல்லியின் பல பகுதிகளில் அடர்த்தியான புகைமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக ஐடிஓ மற்றும் நரேலா பகுதிகளில் AQI முறையே 290 மற்றும் 294 எனக் குறிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் காற்றின் தரம் 202 ஆகக் குறைந்து சிறிது மேம்பாடு காட்டியிருந்தது. ஆனால் இன்று காலை 38 கண்காணிப்பு நிலையங்களில் பெரும்பாலானவை மீண்டும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் செயலி தரவின்படி, 300 க்கு மேல் AQI பதிவாகிய 28 நிலையங்கள் “மிகவும் மோசமான” பிரிவில் உள்ளன.
குருகிராம் (229), நொய்டா (216), காசியாபாத் (274) மற்றும் பரிதாபாத் (187) ஆகிய டெல்லி புறநகரங்களிலும் காற்றின் தரம் மோசமான அளவிலேயே உள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 10 கி.மீ.க்கு கீழாகக் குறைய வாய்ப்பு இருப்பதால், மாசு துகள் குவியும் அபாயம் இருப்பதாக காற்றுத் தர எச்சரிக்கை அமைப்பு எச்சரித்துள்ளது. நவம்பர் 6 முதல் 8 வரை டெல்லியின் காற்று “மிகவும் மோசமான” நிலைக்குத் தள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டுக்காக 200 பராமரிப்பு வேன்கள் மூலம் சாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. தொழில்துறை அலகுகள் மற்றும் வாகனங்களுக்கு கடுமையான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
தலைநகரில் புகைமூட்டம் மீண்டும் மோசமடைந்துள்ளதால், ஹாட்ஸ்பாட் பகுதிகளை இயல்பாக்கும் பணியில் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.