டெங்குவுக்கு ஒரே டோஸ் தடுப்பூசி -பிரேசிலின் சாதனை உலகுக்கு புதிய நம்பிக்கை

Spread the love

மழைக்காலம் வந்தால் அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானது டெங்கு காய்ச்சல். ஏடிஸ் ஈஜிப்டி கொசுவால் பரவும் இந்த வைரஸ், லேசான காய்ச்சலிலிருந்து கடுமையான ரத்தக்கசிவு டெங்குவாக மாறி உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கிறது. இதற்கான நிரந்தரத் தீர்வு கிடைக்காத நிலையில், உலகைக் கவர்ந்த மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தியை பிரேசில் வெளியிட்டுள்ளது.
பிரேசில், உலகிலேயே முதல் முறையாக ஒரே ஒரு டோஸ் போதுமான டெங்கு தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. இனி இரண்டு டோஸ்கள் தேவையில்லை; ஒரே ஊசி போதுமானது, டெங்குவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும். இந்த புதிய தடுப்பூசியின் பெயர் புடாண்டான்-டிவி.
சாவோ பாலோவில் உள்ள புட்டான்டன் நிறுவனம் 8 ஆண்டுகள் ஆய்வு செய்து உருவாக்கிய இந்த தடுப்பூசிக்கு, பிரேசில் சுகாதார ஒழுங்குமுறை ஆணையமான அன்விசா அனுமதி வழங்கியுள்ளது. 12 முதல் 59 வயதுக்குட் பட்டவர்களுக்கு பயன்படுத்தவும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
புட்டான்டன் நிறுவன இயக்குனர் எஸ்பர் கல்லாஸ் கூறியதாவது:
“பிரேசிலின் அறிவியல் மற்றும் சுகாதார துறைக்கு இது வரலாற்று சாதனை. பல தசாப்தங்களாக நம்மைத் துன்புறுத்திய டெங்குவை தற்போது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்
தால் எதிர்க்க முடிகிறது.”
உலகில் தற்போது பயன்பாட்டில் இருந்த ஒரே டெங்கு தடுப்பூசி டேக்-003 ஆகும். இதற்கு 3 மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் அவசியம். ஆனால் புடாண்டான்-டிவி ஒரே டோஸில் செயல்படும் என்பதால், மருத்துவ சேவை மேலும் எளிதாகும்.
16,000 பேருக்கு மேல் செய்யப்பட்ட மருத்துவ சோதனையில், இந்த புதிய தடுப்பூசி கடுமையான டெங்குவுக்கு 91.6% பாதுகாப்பு வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் மிக உயர்ந்த செயல்திறனாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
டெங்கு அதிகரித்து வரும் முக்கிய காரணம் புவி வெப்பமயமாதல். கொசுக்களின் பரவல் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குப் பரவியுள்ளதால், தடுப்பூசி உருவாக்கம் உலகளவில் அவசரத் தேவை ஆனது.