தமிழகத்தில் டாஸ்மாக் மது பானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், பார் உரிமம் வழங்குவதில் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. 2017 முதல் 2024 வரை நடந்ததாக கூறப்படும் ₹1,000 கோடி ரூபாய் அளவிலான மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை (ED) சட்டவிரோத பணப்பரிமாற்ற தடையச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர். இதனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களுக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
அப்போது சுப்ரீம் கோர்ட்டு அமலாக்கத்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.
“அமலாக்கத்துறை என்ன நினைத்துக்கொண்டு செயல்படுகிறது? மாநில விசாரணை அதிகாரத்தின் உரிமையை பறிக்க முயலுகிறதா?” என தலைமை நீதிபதி கேட்டார்.
மேலும், “சந்தேகம் இருந்தாலே அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வது எவ்வாறு சரியாகும்? ஒரு அதிகாரி தவறு செய்திருந்தால் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். சிபிஐ கூட சோதனை செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அரசிடம் தகவல் அளிக்கிறது” எனக் கூறி நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதனையடுத்து, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Leave a Reply