,

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம்; கொள்ளையனை கைது செய்தது எப்படி? – துணை காவல் ஆணையாளர் சந்தீஷ் பேட்டி

jos alukkas
Spread the love
ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த துணை காவல் ஆணையாளர் சந்தீஷ், “கோவையில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ்  நகை கடையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது, இது தொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 300 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையனை தேடும் பணி வேகப்படுத்தப்பட்டது . இதில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில்  தங்கி இருந்த விஜயின் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டார்.  அவரிடம் இருந்த மூன்று கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், தர்மபுரியில் இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜயின் மாமியார் யோகா ராணி கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 1.2 கிலோ நகைகள்  மீட்கப்பட்டது.

தொடர்ச்சியாக விஜய்யின் நடமாட்டத்தை கண்காணித்த தனிப்படையினர், ஆந்திர மாநிலம் காலகஸ்திலிருந்து சென்னைக்கு வருவதை கண்டுபிடித்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் சிம்கார்டு வாங்குவதற்காக முயற்சி செய்த விஜய் தனிப்படையினர் கைது செய்தனர். மொத்தம் 5.15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் 5.12 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது