வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூரில் ராமையா பிள்ளை – சின்னம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ராமலிங்க அடிகளுக்கு இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளும் உண்டு. ராமலிங்க அடிகளார் பிறந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே அவரது தந்தையான ராமையா பிள்ளை இயற்கை எய்தினார். பின்னர் வள்ளலார் மற்றும் குடும்பத்தினர் சென்னை ஏழுகிணறு பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
ஏழுகிணறு பகுதியில் வாழ்ந்து வந்த வள்ளலார் தனது மூத்த சகோதரரான சபாபதியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தனது தம்பி ராமலிங்கம் கல்வியில் சிறந்து விளங்க விரும்பி, அவரை கல்வி சாலைக்கு அனுப்பினார். எனினும் இந்த புவி உலக கல்வியில் நாட்டம் இல்லாமல் இருந்த ராமலிங்க அடிகளார் எப்போதும் முருக தியானத்தில் திகழலானார். கல்வி கற்காமலேயே தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்த ராமலிங்க அடிகளாரை கண்ட வியந்த அவரது ஆசிரியர், ராமலிங்கத்திற்கு கல்வி எதுவும் தேவை இல்லை என கூறிவிட்டார். 1850ஆம் ஆண்டு ராமலிங்க அடிகளாரருக்கு அவரது மூத்த சகோதரியின் மகளான தனக்கொடி எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். எனினும் திருமணம் முடித்த அன்று இரவே திருமண வாழ்க்கையை துறந்து, துறவு வாழ்க்கை மேற்கொண்டார். 1858 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து கடலூர் சென்ற இராமலிங்க அடிகளார், அங்கு 1865 ஆம் ஆண்டு “சமரச சன்மார்க்க சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். இதன் மூலம் மக்களுக்கு கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர், ஜீவகாருண்யம், பிற உயிர்களின் பசி போக்குதல், சாதி சமய வேறுபாடுகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவது போன்ற கொள்கைகளை பரப்பி வந்தார். தனது யோக, தியான சாதனைகளால் பல சித்திகள் கைவறப்பற்ற வள்ளலார் அவற்றை ஆன்மீக மற்றும் பிற மக்களின் துயர் நீக்க பயன்படுத்தி உள்ளார். இறைவன் ஜோதி வடிவானவர் எனவே ஜோதி தெய்வத்திலேயே ஒவ்வொருவரும் இறைவனை தியானித்து பூஜிக்க வேண்டும். மனிதர்களுக்கு “ஜீவகாருண்யம்” எனப்படும் கொள்கையே இறைவனை அடைய கூடிய எளிய வழியாகும். இறந்துவிட்ட நமது முன்னோர்களுக்கு திதி, ஸ்ரார்த்தம், தர்ப்பணம் போன்ற சடங்குகளை செய்வதால் எந்த விதமான பலன்களும் நமக்கோ, அவர்களுக்கோ ஏற்படப்போவதில்லை. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் சாதி, மத, இன, மொழி, நிற பாகுபாடுகளை பாராமல் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும் என வள்ளலார் அஅறிவுறுத்தினார். தன் வாழ்நாளில் சாதி சமய வேறுபாடுகளற்ற சமுதாய உருவாக்க அரும்பாடுபட்டவரும், மக்களுக்கு மெய்யான இறைவழியை காட்டி அவர்களை இறைநிலையை அடைய தொடர்ந்து முயற்சித்தவருமான வள்ளலார் 1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தைப்பூச திருநாள் அன்று வடலூரில் உள்ள சித்தி வளாகத்தில் ஒரு தனி அறைகுள்ளாக சென்று தாழிட்டுக் கொண்டார். தான் தாளிட்டுக்கொண்ட அறையை யாரும் ஒரு வருட காலத்திற்குள்ளாக திறக்க கூடாது என தன் சீடர்களுக்கு கட்டளை இட்டார். அதன்படியே ஒரு வருட காலம் கழித்து வள்ளலார் தாழிட்ட அறையை திறந்து பார்த்த பொழுது அங்கு வள்ளலார் இருந்ததற்கான அடையாளம் ஏதுமே இல்லை என்பதை கண்டு அவரது சீடர்கள் வியப்புற்றனர். ஜோதி வடிவான இறைவனுடன் தன்னுடைய தேகத்தை ஒளி வடிவாகி கலந்துவிட்டார் என அவரது சீடர்கள் நம்புகின்றனர். அதன்படியே இன்றும் தைப்பூசத் திருநாள் அன்று சித்தி வளாகத்தில் வள்ளலார் ஜோதி நிலை அடைந்த அறையில் ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.

Leave a Reply