ஜெமினி சர்க்கசில் பணி புரியும் தம்பதிகளை கோவை ஹெரால்டுக்காக சந்தித்தோம். ஜெமினி சர்க்கஸின் சிறப்பு சாகசமான வீல் ஆப் டெத் சாகசத்தை செய்பவர் பூஷன் லாமா. 39 வயதான இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் கூறுகையில், ‘நான் கடந்த 18 ஆண்டுகளாக சர்க்கஸில் இருந்து வருகிறேன். இங்கு என் அக்கா பணியாற்றி கொண்டிருந்தார். சிறு வயதில் சர்க்கஸ் பார்க்க வந்த எனக்கு சர்க்கஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக இந்த சர்க்கஸில் இணைந்து விட்டேன். எனக்கு இந்த ஆபத்தான சாகசங்களை செய்யும் போது மிகுந்த ரொம்ப சந்தோஷம் கிடைக்கிறது. இங்கு தான் நான் என் மனைவி மீனுகாவையும் சந்தித்தேன். இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் மிகுந்த காதல் கொண்டதால் திருமணம் செய்து கொண்டோம். தற்போது 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவில் பல நகரங்களுக்கு சென்றுள்ளோம். மொரிசியஸ் போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளோம் என்கிறார்.
அவரது மனைவி மீனுகா பேசுகையில், “எனது வயது 36. நான் கடந்த 29 வருடங்களாக சர்க்கஸில் இருக்கிறேன். நான் சிறு வயதிலேயே சர்க்கஸ் மேல் இருந்த ஆசையால் வீட்டை விட்டு வந்து இந்த சர்க்கஸில் சேர்ந்து விட்டேன். நான் இங்கு பணியாற்ற எனது தாய் தந்தை மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எனக்கு சர்க்கஸ் மேல் இருந்த ஈர்ப்பு என்னை இங்கே வந்து சேர வைத்தது. நான் இங்கு லேடர் பாலன்ஸ் சாகசத்தை செய்கிறேன். தற்போது எனது குடும்பமே இந்த சர்க்கஸும் இங்குள்ள கலைஞர்களும் தான். இந்த சர்க்கசுக்கு வரும் பார்வையாளர்களின் கைத்தட்டல்களே எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது, ” என்றார்.
நான் பிறந்ததே இந்த சர்க்கஸில் தான், என்று தொடங்கினார் பீர்ப்பல் நாயர். 40 வயது பீர்பால் நாயரின் தாய் தந்தை இருவரும் சர்க்கஸில் இருந்தவர்கள் தான். அவர் மனம் திறக்கையில், “என் அப்பா அம்மா பல சர்க்கஸ்களில் வேலை செய்தனர். நான் சர்க்கஸில் தான் பிறந்தேன். எனக்கு எட்டு வயதிருக்கும் போது என் அப்பா அம்மா என்னை படிப்பதற்காக ஹாஸ்டலில் சேர்த்தனர். ஆனால் எனக்கு படிக்க பிடிக்காமல் இங்கு வந்து விட்டேன். நான் ராஜ்கமல், சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட சர்க்கஸ்களில் சாகசங்களை செய்து வந்தேன், ஜெமினி சர்க்கசுக்கு நான் வந்து 12 வருடங்கள் ஆகிறது. இப்போது நான் பிலையிங் டிராபிஸ் எனும் சாகசத்தை செய்து வருகிறேன். என் மனைவி ரீனாவை நான் இங்கு தான் சந்தித்தேன்.” என்றார்.
பீர்ப்பல் நாயரின் மனைவி ரீனா கூறுகையில், ” நான் எனது 9 வயதில் இருந்து இங்கு தான் இருக்கிறேன். நான் நேபாளத்தை சேர்ந்தவள். எனக்கு இப்போது 29 வயதாகிறது. நான் இங்கு ஸ்கேட்டிங் சாகசம் செய்து வருகிறேன். நானும் என் கணவரும் 10 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்களாகிறது. எங்களுக்கு அஹான் என்று ஒரு 3 வயது மகன் இருக்கிறான். அவன் இங்கேயே பிறந்து இங்கேயே வளருகிறான். அவனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.” என்றார். தாங்கள் அனுபவிக்காத அனைத்து சந்தோஷங்களையும் தங்கள் மகன் படித்து பெற வேண்டும் என்பது இந்த தம்பதியின் ஆசையாக உள்ளது.
மூன்றாவதாக நாம் சந்தித்தது, விக்ரம் தாப்பா- சானியா தம்பதியினரை. தங்களது கதையை பகிர்ந்து கொண்ட விக்ரம் கூறுகையில், “நான் மேற்கு வங்கத்தை சேர்ந்தவன். எனக்கு 39 வயதாகிறது. எனது அப்பா அம்மா இறந்த பின்னர் எனது பெரியப்பா எனது 10 வயதில் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார். நான் அஜந்தா, ஃபேமஸ் மற்றும் ராயல் சர்க்கஸ்களில் வேலை செய்து விட்டு கடந்த 3 வருடங்களாக ஜெமினி சர்க்கஸில் வேலை பார்க்கிறேன். இங்கு நான் பிலையிங் டிராபிஸ் சாகசத்தை செய்து வருகிறேன்.நான் குஜராத், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சர்க்கஸ் சாகசங்களை செய்துள்ளேன். எனக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது,” என்று கூறினார்.
அவரது மனைவி சானியா கூறுகையில், “அசாமில் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எனது 7 வயதில் இருந்தே சர்க்கஸில் சாகசங்கள் செய்து வருகிறேன். நான் இப்போது இங்கு டபுள் ஏரியல் ஆக்ட் செய்து வருகிறேன். எங்களுக்கு ரிஷப் என்று ஒரு 12 வயது மகன் இருக்கிறான். அவன் இப்போது அஸ்ஸாம் டான் பாஸ்கோ பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறான். நாங்கள் அதிகமாக படிக்காவிட்டாலும், எங்கள் மகன் நன்கு படித்து ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும். தங்கள் மகனுக்கு அவர்கள் சர்க்கஸில் வேலை செய்வது குறித்து பெருமை தான் . அவனை பார்க்க அவ்வப்போது அஸ்ஸாமுக்கும் போவோம் என்று தெரிவித்தார்.
என்னதான் இந்த கலைஞர்கள் ஊக்கத்துடன் பேசினாலும், சர்க்கஸ் கலை அழியும் நிலையில் இருக்கும் வேதனையை அவர்களிடத்தில் காண முடிந்தது. எவ்வளவோ பணம் செலவழிக்கும் மக்கள் இது போன்ற ஏழை கலைஞர்களை வாழ வைக்கும் சர்க்கஸ் நிகழ்வ்வியை குடும்பத்துடன் சென்று பார்த்து அவர்களை ஊக்கப்படுத்தினால் எஞ்சியிருக்கும் சில கலைஞர்களாவது மிச்ச மீதி வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வார்கள்.
Leave a Reply