ஜி.கே. மணியை தோற்கடிக்க கங்கணம் கட்டும் அன்புமணி : மனைவி சவுமியாவை களமிறக்க திட்டம்

Spread the love

 

சட்டசபை தேர்தலில், பென்னாகரம் தொகுதியில் மனைவி சவுமியாவை போட்டியிட வைக்க, பா.ம.க., தலைவர் அன்புமணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பசுமை தாயகம்’ அமைப்பின் தலைவராக இருந்த சவுமியா, கடந்த லோக்சபா தேர்தல் வாயிலாக அரசியல் களத்திற்கு வந்ததும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கியதோடு, தன் மூத்த மகள் ஸ்ரீகாந்தியை அரசியலுக்கு அழைத்து வந்து செயல் தலைவராக, ராமதாஸ் நியமித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டியளித்த ராமதாஸ், ‘அன்புமணியிடம் இருப்பது கட்சி அல்ல. அது ஒரு கும்பல். அந்த கும்பலுக்கு அன்புமணியும், சவுமியாவும் தான் தலைவர்’
இதுவரை, மகனை மட்டும் விமர்சித்த ராமதாஸ், இப்போது மருமகள் சவுமியா தான் அனைத்து பிரச்னைக்கும் காரணம் என்பது போல குற்றஞ்சாட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி தான் காரணம் என, அன்புமணி தரப்பினர் கூறுகின்றனர். மேலும், சட்டசபை தேர்தலில் மகள் ஸ்ரீகாந்தியை, தர்மபுரி தொகுதியில் நிறுத்த ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.

அதே நேரத்தில் சவுமியாவை ராமதாஸ் விமர்சிக்க துவங்கியதால், சவுமியாவை எம்.எல்.ஏ.,வாக்க அன்புமணி முடிவு செய்துள்ளார்.

கடந்த, 2014 – -2019 வரை, தர்மபுரி எம்.பி.,யாக இருந்த அன்புமணி, 2024 லோக்சபா தேர்தலில், இந்த தொகுதியில், சவுமியாவை நிறுத்தினார்.அ.தி.மு.க., இல்லாமல் பா.ஜ., உடன் மட்டுமே கூட்டணி அமைத்த நிலையில் 21,300 ஓட்டு வித்தியாசத்தில் சவுமியா தோல்வியடைந்தார். எனினும், தர்மபுரி தொகுதிக்குட்பட்ட, பென்னாகரம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளரை விட, சவுமியாவுக்கு 11,585 ஓட்டுகள் அதிகம் கிடைத்தது.எனவே, பென்னாகரத்தில் சவுமியா போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என அன்புமணி கணக்கு போடுகிறார். தற்போது, பென்னாகரம் எம்.எல்.ஏ.,வாக, பா.ம.க., கவுரவத் தலைவர் மணி இருக்கிறார். தனக்கு எராமதாஸ் உடனான பிரச்னைக்கு மணி தான் காரணம் என, கருதுவதால், அவரை தோற்கடிக்கவும், இந்த முடிவை அன்புமணி எடுத்ததாக தெரிகிறது