ஜனவரி 9-ம் தேதி கூட்டணிப் குறித்த அறிவிப்பு வெளியாகும் – தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

Spread the love

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை மறுநாள் கோவை புறநகரில் கேப்டன் ரதயாத்திரை நடைபெற இருப்பதாக தெரிவித்தார். SIR பணிச்சுமை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். SIR-ல் பணிச்சுமை அதிகரித்துள்ளதற்கு மத்திய அரசு கவனம் செலுத்தி, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், நிலைமை குறித்து மக்களுக்கு வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுபடுத்த வேண்டியும் கேட்டுக்கொண்டார்.

கூட்டணி குறித்து அவர் கூறியதாவது: ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மக்கள் உரிமை மாநாடு 2.0-ல் கூட்டணிப் குறித்த அறிவிப்பு வெளியாகும். கூட்டணி தமிழகம் மற்றும் அதன் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்படும் எனவும், இந்த முறை கூட்டணி ஆட்சி அமைவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது எனவும் தெரிவித்தார். கூட்டணி அரசு அமைந்தால் பொறுப்புகள் சமமாகப் பகிரப்பட்டு, மக்களின் நலனே முதன்மை எனவும் கூறினார்.

2026 தேர்தல் தமிழ்நாட்டில் இதுவரை காணாத வகையில் நடைபெறவிருக்கிறது என்றும், பல கட்சிகள் தனித்த நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில் நான்கு முனை போட்டி உருவாகும் வாய்ப்பு குறித்து கேட்கப்பட்டபோது, “சீமானும் களத்தில் தான் இருக்கிறார், அவரை ஏன் விடுகிறீர்கள்?” என பிரதிகரித்தார்.

கோவை–மதுரை மெட்ரோ திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார். மேலும் கோவை–மதுரை வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் பரிசீலித்து செயல்படுத்த வேண்டுகோள் விடுத்தார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆளும் கட்சி முதலில் நிறைவேற்ற வேண்டும் என்றும், வரவிருக்கும் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கூட்டணி மந்திரிசபை அமையும் என்றும் உறுதியளித்தார். வடஇந்திய மாநிலங்களில் போல, தமிழ்நாட்டிலும் கூட்டணி மந்திரிசபை அமைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம், மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது செய்தியாளர்களின் பொறுப்பாகவும் அவர் வலியுறுத்தினார்.