கபடி ஆட்டத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் கில்லிதான் என நிமிர்ந்த உடலமைப்புடன் அழுத்தம் தரும் நடிப்பைக் கொடுத்து நல்ல நடிகர்தான் என பெயர் வாங்கியிருக்கிறார் சேலம் பிரபஞ்சன். சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த கபடி வீரர் பிரபஞ்சன், ப்ரோ கபடி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி புகழ் பெற்றவர். கபடியில் மிகச்சிறந்த ரைடர் இவர். சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினம் ரோலில் அசத்தலாக நடித்திருப்பார். இந்திய அணி பயிற்சியாளரிடம் வனத்தி கிட்டானுக்காக வாதிடும் காட்சிகளில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பார். ‘இவன வெச்சுட்டு ஜெயிப்பியா? என்ன கேரண்டி?’ என்று கோச் கேட்கும்போது பிரபஞ்சன்பேசும் ” ஜெயிப்போம் சார். அப்டி ஜெயிக்கலன்னா இந்த இருபதாவது மாடில குதிச்சு செத்துடறேன். சரியா சார்?” வசனத்துக்கு திரையரங்கில் பலத்தை கைதட்டல்களை அள்ளுவார்.
பிரபஞ்சனின் தந்தையின் பெயர் குமரவேல். அவரும் மிகச்சிறந்த கபடி வீரர். உள்ளூர் போட்டிகளில் விளையாடிப் புகழ் பெற்றவர். தந்தை வழியிலேயே பிரபஞ்சனும் கபடிக்குள் நுழைந்தார். 12ம் வகுப்பு வரை படித்த இவரை இந்திய விளையாட்டு ஆணையம் அரவணைத்துக் கொண்டது. அங்கு கிடைத்த ஆதரவுடன் கல்லூரியில் படித்துக் கொண்டே கபடியில் தீவிரம் காட்ட தொடங்கினார்.
பைசனில் துருவ் ஏற்றிருக்கும் பாத்திரமான வனத்தி கிட்டான், தமிழக வீரர் மணத்தி கணேசன் என்பது பலரும் அறிந்த விஷயம். மணத்தி கணேசனின் உடற்பயிற்சி ஆசிரியர் தங்கராஜ் போல, சாமியப்பன் என்ற கபடி பயிற்சியாளர்தான் பிரபஞ்சனையும் பட்டை தீட்டினார். முதலில் மாவட்ட அளவில் தேர்வானவர் உச்சக்கட்டமாக இந்திய அணிக்கும் தேர்வானார். ஆனால் இந்திய அணியில் களம் இறங்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ப்ரோ கபடி தொடரில் முதலில் மும்பை அணியான UMumba அணிக்காகவும், பிறகு தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடினார். ஆனாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. அதே வேளையில் இளம் வீரரான அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அவ்வப்போது களம் இறங்க வாய்ப்பு கிடைத்தது.
இவரது ஆட்டத்தை கண்ட தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் இவரை தனது அணிக்காக தேர்வு செய்தார். பிறகு ப்ரோ கபடியில் தமிழ் தலைவாஸ் அணியில் சேர்ந்தார். அந்த அணியின் மிகச்சிறந்த ரைடராகவும் மாறினார். இதனால் பிரபஞ்சனின் வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியது. தற்போது கஸ்டம்சில் பணி புரிகிறார். தொடர்ந்து ப்ரோ கபடிக்காக ஆடி வந்தவர் தனக்கு உடன்பாடு இல்லாத விஷயங்களுக்காக அதில் இருந்து முற்றிலும் விலகி விட்டார்.
இந்த நிலையில்தான் மாரி செல்வராஜின் பைசன் – காளமாடன் படத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினம் ரோலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இது குறித்து அவர் கூறுகையில், ” எனக்கு சினிமாங்கிற புதிய களம். அதனால், முதலில் நடிக்க மறுத்துட்டேன். ஆனால், மாரி சாரின் குழுவினர் தொடர்ந்து என்னிடத்தில் பேசி ஒப்புக் கொள்ள வைத்தனர். மணத்தி கணேசன் சாரும் எனக்கு இன்ஸ்பிரேஷன்தான். மாரி சாரும் கபடியும்தான் என்னை இந்த படத்தில் நடிக்க வைத்தது. கபடி வீரராக இருந்து கபடி வீரராகவே சினிமாவில் நடித்துள்ளேன். இப்போது முன்பின் தெரியாத நபர்களும் எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள். ‘படத்தில் நீங்கள் பேசுற வசனம்தான் ஹைலைட். அதனால் நடிக்கவும் கத்துக்கங்க’ என்று மாரி சார் என்னிடத்தில் சொன்னார். இந்த சமயத்தில் சூரி அண்ணன்தான் எனக்கு நடிப்பு சொல்லி கொடுத்தார்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.



Leave a Reply