கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை ஒரு பரிதாபகரமான விபத்து நிகழ்ந்தது. தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய இந்த கோர சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது வேன், ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதியதின் தாக்கத்தில் பள்ளி வேன் முற்றிலும் நொறுங்கி அப்பளம் போல் சிதறி விழுந்தது.
விபத்து நிகழ்ந்த தகவலை அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுவதில், கேட் கீப்பர் தூங்கிவிட்டதால் கேட் மூடப்படவில்லை என்றும், அதனால் வேன் வரும்போது நேராக ரயிலில் மோதியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக முக்கியமான ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தப்பட்டு, மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கும் பெரும் அவதியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது. இன்று காலை சுமார் 7.45 மணியளவில் விபத்து நடந்ததாகவும், கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சி செய்தபோது வேன் ஓட்டுநர் வேகமாக நுழைந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாதது என்றும், கேட் கீப்பர் அதை மேனுவலாக மூட முயற்சித்த நிலையில் விபத்து நடந்ததாக துறை விளக்கம் அளித்துள்ளது. மக்கள் கூறும் “கேட் மூடப்படாமல் இருந்தது” என்ற குற்றச்சாட்டுக்கு ரயில்வே துறை மறுப்பு தெரிவித்துள்ளது
Leave a Reply