செந்தில் பாலாஜி அண்ணாமலை வார்த்தை போர்

Spread the love

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கூட்டத்தில் கோவை மக்களை “பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள்” என்று அவமரியாதையாக பேசியதாகக் கூறி தயாநிதி மாறனை கடுமையாக கண்டித்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்துக்கொண்டு இருந்ததாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். கோயம்புத்தூர் மக்கள் பண்பும் மரியாதையும் மிக்கவர்கள் என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களைப் போலவே அவர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் முக்கிய பொருளாதார பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாரும் மாநிலத்தைச் சுரண்ட நினைப்பதில்லை என்றும், கோபாலபுரம் குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கு இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் உழைப்பால் தமிழக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கோவை மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பேச்சுக்காக தயாநிதி மாறன் உடனடியாக கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், திமுகவின் ஆணவ அரசியல் காரணமாகவே கோவை மாவட்டத்தின் பத்து தொகுதிகளிலும் மக்கள் அக்கட்சியை புறக்கணித்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் தேர்தலில் தமிழகமெங்கும் திமுகவுக்கு இதே நிலை ஏற்படும் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.