செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய அங்கீகாரம் – தமிழகத்திற்கு பெருமை

Spread the love

உலகின் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களுக்கு யுனெஸ்கோ தனது அங்கீகாரத்தை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில், மாமல்லபுரம் நினைவுச்சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய ஐந்து நினைவுச்சின்னங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தப் பட்டியலில் தற்போது ஆறாவது இடமாக செஞ்சி கோட்டையும் இணைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா முழுவதும் உள்ள மராத்தியர்களின் ராணுவ தளங்களை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதையடுத்து, யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜகாம்ஸ் இந்தியாவுக்கு வந்து அவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 47-வது கூட்டத்தில், மஹாராஷ்டிராவில் உள்ள 11 மராத்திய ராணுவ தளங்களுடன், தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டையும் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

இதன் மூலம், இந்தியாவில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற சின்னங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சி கோட்டை, 1190 ஆம் ஆண்டு அனந்தக்கோன் என்பவரால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்தக் கோட்டைக்கு தொடர்ந்து விஜயநகரப் பேரரசு, நாயக்கர்கள், பீஜாப்பூர் சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய ஆட்சிகள் வந்தன.

முக்கோண வடிவமைப்புடன், 3 பெரிய மலைகளும், 2 சிறிய குன்றுகளும், 12 கி.மீ நீளமுள்ள மதிலும், 80 அடி அகலமுள்ள அகழிகளும் உள்ளன. கோட்டையின் உள்ளே கோவில்கள், மண்டபங்கள், படைவீரர்கள் தங்கும் இடங்கள், நெல் களஞ்சியம், சிறைச்சாலைகள், தானியக் களஞ்சியம், கல்யாண மஹால், புனிதக் குளம், செஞ்சியம்மன் கோயில் எனப் பல கட்டடக் கழிவுகளும் காணப்படுகின்றன.

கீழ்க் கோட்டைக்கு செல்ல இரண்டு முக்கிய வாயில்கள் உள்ளன – வடக்கில் வேலூர் வாயில், கிழக்கில் பாண்டிச்சேரி வாயில். இரண்டிலும் 24 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்ட கணவாய்கள் உள்ளன. எதிரிகளை தடுக்க இழுவைப் பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போர்காலத்தில் இவை அகற்றப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவந்தது.

இந்த அங்கீகாரத்தால், செஞ்சிக் கோட்டைக்கு அதிக நிதி உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இது பெரியளவில் சுற்றுலா வளர்ச்சி பெறும் முக்கியத் தளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒரு புதிய அத்தியாயம் ஆகும்.