செங்கோட்டையன் மீது நடந்தது அநீதி;கூட்டணி முடிவு அம்மா பிறந்தநாளில் – டிடிவி தினகரன்

Spread the love
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் குறித்து விளக்கம் அளித்தார். ஒருங்கிணைப்பு நோக்கில் செயல்பட்டவராக இருந்தபோதும், செங்கோட்டையன் மீது அநியாயமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

செங்கோட்டையன் வீட்டிலேயே இருந்து இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேறு கட்சிக்கு செல்ல வேண்டிய நிலை உருவானதாக தினகரன் கூறினார். இதனால் அவர் கடும் மனவேதனை அடைந்ததாகவும், இந்த செயல்பாடுகளைத் தான் அனுப்பிவைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) விலகியதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை காரணம் இல்லை எனவும், கூட்டணியிலிருந்து விலகியது கட்சி எடுத்த தனிப்பட்ட முடிவு என்றும் தினகரன் தெளிவுபடுத்தினார்.

கட்சியின் எதிர்கால அரசியல் பயணம் குறித்து பேசும்போது, அம்மாவின் பிறந்தநாளில் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். “துரோகத்தை வீழ்த்துவதே எங்கள் நோக்கம்” என்றும், பல கட்சிகளிடமிருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்புகள் வருகின்றன என்றும், சரியான நேரத்தில் சிறந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

திருப்பரங்குன்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், “திருப்பரங்குன்றத்தில் தமிழ்கடவுள் முருகன் உள்ளார்; அதை எவராலும் அயோத்தியாக மாற்ற முடியாது” என்று வலியுறுத்தினார்.

மேலும், இனி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டங்களை செங்கோட்டையன் சிறப்பாக ஒருங்கிணைப்பார் என்றும், அவரது அனுபவம் கட்சிக்கு பெரும் பலனாக இருக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.