சூரசம்ஹாரம் காரணமாக அக்டோபர் 27ல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்வை முன்னிட்டு, அந்த நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பக்தர்கள் மற்றும் மக்களிடையே பெரும் மகிழ்ச்சி நிலவுகிறது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்ததாக நம்பப்படும் இந்த நிகழ்வில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்கிறார்கள்.

சூரசம்ஹாரம் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் மறுநாளான அக்டோபர் 28 ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

இந்நிலையில், அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் சில அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அளிக்கப்படும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக நவம்பர் 8 ஆம் தேதி (இரண்டாம் சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது